

வி.ராம்ஜி
கமலும் ரஜினியும் முன்னணியில் இருந்த அதேகாலகட்டத்தில்தான் , மோகன் தனிஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருந்தார். யாருடைய சாயலிலும் நடிக்காமல், எவர் வழியையும் பின்பற்றாமல், வெகு இயல்பாகவும் பாந்தமான கதாபாத்திரங்களிலும் நடித்து, தனக்கென தனியிடத்தைப் பிடித்து வைத்திருந்தார்.
85-ம் ஆண்டில், கமல் - ரஜினி மிகுந்த பரபரப்புடன் ஓடிக்கொண்டிருந்தார்கள். அதேகாலகட்டத்தில், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்தி, முரளி என எண்ணற்ற நாயகர்களும் வலம் வந்துகொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில்தான், ஆர்ப்பாட்டமே இல்லாமல், ராஜாங்கம் பண்ணிக்கொண்டிருந்தார் மோகன். அவருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் இருந்தன. ஆனால் எந்த ஆர்ப்பாட்டமோ, கொடிதோரணமோ இல்லாமல் அமைதியாக இருந்தார்கள் ரசிகர்கள், மோகனைப் போலவே!
‘இந்தக் கதைதான் பண்ணுவேன்’ என்றெல்லாம் குறுக்கிக்கொள்ளாமல் நடித்து வந்தார் மோகன். அதேபோல், ஒருபக்கம் தயாரிப்பாளர்களின் கையையும் மனதையும் கடிக்காத நடிகராக, அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடித்தார். அதேபோல், எந்த மாதிரியான படங்களை எடுக்கிற இயக்குநராக இருந்தாலும் அவர்கள் மோகனை அணுகினார்கள். அவர்களின் கதைகளுக்கு மோகனே கதையின் நாயகனாக இருப்பார் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
இதேபோல், நடிகைகள் விஷயத்திலும் அப்படித்தான். இந்த நடிகை அந்த நடிகை என்றில்லாமல், எல்லா நடிகைகளுடனும் நடித்தார். இதிலொரு சுவாரஸ்யம்... எல்லா நடிகைகளுடன் நடித்த போதும், ‘ஜோடிப்பொருத்தம் சூப்பர்’ எனக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் ரசிகர்கள்.
1985-ம் ஆண்டில்,இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில், மோகன் நடித்த ‘அன்பின் முகவரி’ திரைப்படம் வெளியானது. மோகன், சத்யராஜ், சசிகலா, எஸ்.எஸ்.ஆர்., விஜி முதலானோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். மணிவண்ணன் முதலில் இயக்கிய ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘நூறாவது நாள்’, ‘24 மணி நேரம்’ என பல படங்களில் மோகனே நாயகன்.
‘பகல் நிலவு’ எடுத்த மணிரத்னம், கோவைத்தம்பியின் ‘இதயக்கோயில்’ படத்தை இயக்கினார். ராதா, அம்பிகா, கவுண்டமணி முதலானோர் நடித்த இந்தப் படத்துக்கு வழக்கம் போல் இளையராஜா இசை. எல்லாப் பாடல்களும் ஹிட்டு. கோவைத்தம்பியின் படங்களில் மோகன் தொடர்ந்து நடித்தார் என்பது தெரியும்தானே. அதேபோல், மணிரத்னம் பின்னர் இயக்கிய ‘மெளனராகம்’ படத்திலும் மோகனே நாயகனாக வலம் வந்தார் என்பது கூடுதல் தகவல். மோகனின் விரக்தியும் சோகமும் கலந்த நடிப்பும் குறிப்பாக, அவர் தோளில் சால்வை போட்டுக்கொண்டிருந்த ஸ்டைலும் ரொம்பவே பேசப்பட்டது.
‘இதயக்கோயில்’ பற்றி இன்னொரு கொசுறு தகவல்... ‘இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்’ என்ற பாடலை இளையராஜா எழுதினார். இதுதான் இளையராஜா எழுதிய முதல் பாடல்.
இதே 85-ம் ஆண்டில்தான், ‘உனக்காக ஒரு ரோஜா’ என்ற திரைப்படத்தில் நடித்தார் மோகன். சிவாஜியை வைத்து பல ஹிட் படங்களைத் தந்த சி.வி.ராஜேந்திரன் இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில், மணிவண்ணனின் கதை வசனத்தில், ஏற்கெனவே ‘லாட்டரி டிக்கெட்’ படத்தில் மோகன் நடித்திருந்தார். ‘உனக்காக ஒரு ரோஜா’வில் மோகனுடன் சுரேஷ், அம்பிகா முதலானோர் நடித்திருந்தனர். ‘கிளிஞ்சல்கள்’ படத்துக்குப் பிறகு, டி.ராஜேந்தர் இயக்காத இந்தப்படத்துக்கு இசையமைத்திருந்தார். அதுமட்டுமின்றி வசனமும் கூட அவர் ஸ்டைலில்தான் இருந்தது.
இயக்குநர் கே.ரங்கராஜின் முதல் படம் ‘நெஞ்சமெல்லாம் நீயே’. பின்னர், கோவைத்தம்பியின் ‘உன்னை நான் சந்தித்தேன்’ படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களிலும் மோகன் நடித்திருந்தார். இப்போது கோவைத்தம்பியின் ‘உதயகீதம்’ படத்தை இந்த வருடம் இயக்கினார். தூக்குதண்டனைக் கதையாகவும் பாடகராகவும் மோகன், பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மோகன், ரேவதி, லட்சுமி ஆகியோரின் நடிப்பு ரொம்பவே பேசப்பட்டது. இளையராஜா இசை. எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இளையராஜா. பல ஊர்களில் 200 நாட்களையும் 300 நாட்களையும் கடந்து ஓடியது.
ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் ‘பயணங்கள் முடிவதில்லை’ ‘தூங்காத கண்ணின்று ஒன்று’ என படங்கள் செய்த மோகன், இந்த வருடத்தில் ‘குங்குமச்சிமிழ்’ செய்தார். எளிமையான கதை. அதை இனிமையாகச் சொன்ன திரைக்கதை. படத்தை இன்னிசை மழையாக்கிய இளையராஜாவின் பாடல்கள். மோகன், இளவரசி, ரேவதி ஆகியோரின் ஆகச்சிறந்த நடிப்பு என எல்லாம் கலந்து, படத்தை பிரமாண்டமான வெற்றிப் படமாக்கியது.
இதே 85-ம் ஆண்டில், டி.ராமாநாயுடு தயாரிப்பில் உருவானது ‘தெய்வப்பிறவி’ திரைப்படம். மோகன், ராதிகா, ஊர்வசி, ராதாரவி நடித்திருந்தனர். வி.சி.குகநாதன் கதை, வசனம் எழுத, பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கினார்.
மோகன் - சசிகலா, மோகன் - ரேவதி, மோகன் - இளவரசி, மோகன் - ராதா, மோகன் - அம்பிகா என ஒரே வருடத்தில் வரிசையாக, நிறைய நடிகைகளுடன் நடித்தார் மோகன். எல்லாமே ஜோடிப்பொருத்தம் சூப்பர் என்றார்கள் ரசிகர்கள்.
இதே 85-ம் ஆண்டில், இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில், அறிமுக நடிகை ஜெயஸ்ரீ மோகனுக்கு ஜோடியாக நடிக்க வெளியானது ‘தென்றலே என்னைத் தொடு.’ படமும் பாடல்களும் மிகப்பிரமாண்டமான வெற்றியைக் கொடுத்தன.
படங்களில், ஸ்டில்ஸ் ரவி என டைட்டிலில் பார்த்திருப்பீர்கள். அவர் மோகன் சென்னைக்கு வந்த காலகட்டத்தில் நல்ல நண்பரானார். அவருக்காகவும் இயக்குநர் மனோபாலாவுக்காகவும் ‘நான் உங்கள் ரசிகன்’ எனும் படத்தை நடித்துக் கொடுத்தார் மோகன். படத்துக்கு தயாரிப்பாளர் ஸ்டில்ஸ் ரவி. ராதிகா, நளினி முதலானோர் நடித்தனர். கங்கை அமரன் இசை.
முன்னதாக, மனோபாலா இயக்கத்தில் ராதிகா, நளினியுடன் ‘பிள்ளைநிலா’ படத்தில் நடித்தார் மோகன். இளையராஜா இசையில் பாடல்கள் அமர்க்களப்படுத்தின. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.
ஒரே வருடத்தில் வெளியான இத்தனைப் படங்களில், ’இதயக்கோயில்’, ’உதயகீதம்’, ‘குங்குமச்சிமிழ்’, ‘தென்றலே என்னைத் தொடு’, ‘பிள்ளைநிலா’ முதலான படங்கள், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.