

எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு அல்ல என்று குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக ரஜினி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம் உட்பட பல வட மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இந்த சம்பங்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஆங்காங்கே சில கல்லூரிகளின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் மாணவர்கள் போராட்டம் தொடர்பாகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக ரஜினி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில், "எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார் ரஜினி.