

ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் 'ப்ரூஸ் லீ' படத்தின் நாயகியாக நடிக்கவிருந்த நயன்தாரா, தற்போது அப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவிருக்கும் 'ப்ரூஸ் லீ' படத்தை இயக்குநர் பாண்டிராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிரசாந்த் இயக்கவிருக்கிறார். பாண்டிராஜ் வசனம் எழுதியிருக்கும் இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். சம்பளப் பேச்சுவார்த்தை அனைத்துமே சுமுகமாக நடைபெற்று வந்ததால், அப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால், 'ப்ரூஸ் லீ' படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டார். 'ப்ரூஸ் லீ' படப்பிடிப்புக்கு கேட்ட தேதிகள் வேறு படத்துக்கு ஒதுக்கி இருப்பது தான் இதற்கு காரணம் என்று படக்குழு தெரிவித்தது.
தற்போது நாயகி வேடத்துக்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் வெளியான உடன் 'ப்ரூஸ் லீ' படத்தில் முழுக்கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்