

'ஹீரோ' படத்துக்கு விளம்பரப் புதுமை ஏன் என்பதற்கான விளக்கத்தைத் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைத்துள்ளார்.
நாளை (டிசம்பர் 20) வெளியாகவுள்ள இந்தப் படத்தை மிகப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி வருகிறது கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ். இந்தப் படத்துக்காக மொபைல் கேம், லேசர் விளம்பரம், திரையரங்குகள் முழுக்க விளம்பரப் பலகைகள் என வித்தியாசமாகவும் செய்து வருகிறது.
இந்த விளம்பரங்கள் தொடர்பாக சிவகார்த்திகேயன் கூறுகையில், "விளம்பரங்களில் அவர்களின் புதுமை எனக்குப் பிடித்திருந்தது. மக்களுக்கு அதன் பின்னால் இருக்கும் யோசனை புரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால், பட வெளியீட்டுக்குப் பிறகு ஏன் 'ஹீரோ' பெயர் கட்டிடங்களின் மீது காட்டப்பட்டது என்பதற்கான விடை கிடைக்கும்.
சிலர் 'ஹீரோ' படத்துக்கான விளம்பரங்கள் அதிகப்படியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் 'ஹீரோ' போன்ற ஒரு படத்துக்குத்தான் இப்படியான புதுமைகளைப் பயன்படுத்த முடியும். அதே தயாரிப்பாளரால் 'டாக்டர்' படத்துக்கு இப்படி விளம்பரம் செய்ய முடியாது" என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.