

ட்விட்டர் தளத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளார் குஷ்பு. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
திரையுலகப் பிரபலங்களில் ட்விட்டர் தளத்தினை அதிகப்படியாக உபயோகப்படுத்தி வந்தவர் குஷ்பு. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதால், பாஜக கட்சியினர் தொடர்பான செய்திகளுக்கு தன்னுடைய எதிர்ப்புகளை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வந்தார். கடந்த நவம்பர் மாதம் ட்விட்டர் தளத்திலிருந்து விலகினார் குஷ்பு.
இந்நிலையில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த மசோதா தொடர்பாக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாகப் புகைப்படங்கள், வீடியோக்களும் ட்விட்டர் தளத்தில் வெளியாகியுள்ளன.
தற்போது மீண்டும் ட்விட்டர் தளத்துக்குத் திரும்பியுள்ளார் குஷ்பு. குடியுரிமைச் சட்டத் திருத்தம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
''மீண்டும் ட்விட்டர் தளத்துக்கு இவ்வளவு சீக்கிரம் திரும்புவேன் என நான் நினைக்கவில்லை. ஆனால், நான் இப்போது பேசாவிட்டால் என் வாழ்நாள் முழுவதுமே நான் என்னைப் பற்றியே வெட்கப்பட வேண்டியிருக்கும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு இந்தியாவைச் சிதைக்கிறது. மாணவர்கள் நம் பலம், நம் எதிர்காலம்.
பாஜகவும், நரேந்திர மோடியும் தங்களின் மோசமான முயற்சிகளுக்காக வெட்கப்பட வேண்டும். மாணவர்கள் துன்பத்தில் உள்ளனர். தேசத்தின் எதிர்காலத்தைச் சிதைப்பதை ஏற்க இயலாது. சில அதிகாரப் பசி கொண்ட மிருகங்களால் நம் தேசத்தின் எதிர்காலம் அழிக்கப்படுகிறது, முடக்கப்படுகிறது. நான் இந்நேரத்தில் மாணவர்களின் கருத்துக்குத் துணை நிற்கிறேன்.
இந்நாட்டின் பிரஜை இவர், இவர் குடிமகன் இல்லை என்றெல்லாம் தீர்மானிக்க நீங்கள் யார் அமித் ஷா அவர்களே? தேசத்தின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்க நீங்கள் யார்? நீங்கள் யாரை இப்போது அகதிகள், வந்தேறிகள் என்று அழைக்கிறீர்களோ அவர்கள்தான் உங்களுக்கு வாக்களித்தனர் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த தேசம் மதச்சார்பின்மையால் இயங்குகிறது. மதத்தினால் அல்ல. அரசியல் தாண்டி குரல் எழுப்பியுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள். மாணவர்களுக்கு இந்நேரத்தில் கைகொடுப்பது அவசியமானதாகும். வாழ்த்துகள் சார்.
உங்களைப்போல் இன்னும் நிறையப் பேர் வரவேண்டும். இந்தியா இந்துக்களாலோ முஸ்லிம்களாலோ அல்லது சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள், பௌத்தர்களாலோ ஆனது அல்ல. ஒற்றுமையால் மட்டுமே ஆன தேசம். அமைதியும் அகிம்சையும் நிறைந்த தேசம். அன்பும் பன்முகத்தன்மையும் கொண்ட தேசம். ஜனநாயகத்தினால் ஆன தேசம். நரேந்திர மோடி அவர்களே அதைச் சிதைக்காதீர்கள்''.
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.