

சூர்யாவுடன் நடிப்பதுதான் கஷ்டம். கார்த்தியுடன் நடிப்பது எளிப்பது என்று 'தம்பி' படம் தொடர்பான பேட்டியில் ஜோதிகா தெரிவித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், செளகார் ஜானகி, அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தம்பி'. வைகாம் நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து நாளை (டிசம்பர் 20) வெளியாகவுள்ளது.
இந்தப் படம் தொடர்பாக ஜோதிகா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
''17 வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் சென்னையில் செட்டில் ஆகிவிட்டேன். என் தம்பியுடன் நிறைய நாட்கள் செலவழித்ததில்லை. அந்த வருத்தம் இருந்தது. 'தம்பி' படப்பிடிப்பில்தான் நாங்கள் இருவரும் நிறையப் பேசினோம்.
சூர்யாவுடன் நடிப்பதுதான் கஷ்டம். கார்த்தியுடன் நடிப்பது எளிப்பது. ஏனென்றால், சூர்யாவுடன் நடிக்கும்போது அடிக்கடி செல்லமாகச் சண்டை வரும். பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், நான் நடிக்க வாய்ப்பு இருந்தால்தான் படங்களை ஒப்புக் கொள்வேன்.
அப்படி 'தம்பி' கதையில் என் திறமையை நிரூபிக்கப் பல காட்சிகள் உள்ளன. என்னைச் சிலர் 'பொம்பள கமல்' என்கிறார்கள். அதில் உடன்பாடு இல்லை. சினிமாவில் பொம்பள கமல் என்றால், அது நடிகை ஊர்வசி மேடமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அவர் மாதிரி வேறு யாராலும் நடிக்க முடியாது. எனது பல முக்கியமான ரியாக்ஷன்கள் இந்தப் படத்தில் இருக்காது. எனக்கு ஒரே மாதிரி நடிப்பதிலும் விருப்பமில்லை. எனக்கும் வயதாகிவிட்டது இல்லையா?
இந்தப் படத்தில் தம்பியாக கார்த்தி நடித்திருந்தாலும், அவரை அடிப்பது போன்ற காட்சிகள் இல்லை. இதுவரை அம்மாவாக நடித்துள்ளேன், அக்காவாக நடித்ததில்லை. எனக்கே இது புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் என் ஜோடி யார் என்பது சஸ்பென்ஸ்''.
இவ்வாறு ஜோதிகா பேசியுள்ளார்.