

'தம்பி' படத்தின் கதைக்களம், அண்ணி ஜோதிகாவுடன் நடித்த அனுபவம் தொடர்பாக கார்த்தி தெரிவித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், செளகார் ஜானகி, அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தம்பி'. வைகாம் நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து நாளை (டிசம்பர் 20) வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் கதைக்களம், அனுபவம் தொடர்பாக நடிகர் கார்த்தி கூறியிருப்பதாவது:
''அக்கா, தம்பி கதை என்று கூறியதால் அக்கா பாத்திரத்திற்கு அண்ணி ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால், அவரிடம் ஆலோசித்திருக்கிறார்கள். அண்ணி சம்மதம் தெரிவித்தார். எனக்கு முன்பே அண்ணி கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டார். என்னிடம் அதைக் கூறும்போது உற்சாகமாக இருந்தது.
ஜீத்து ஜோசப் சார் இயக்கம் என்றதும் இன்னும் சிறப்பு கூடியது. குடும்பக் கதையை மையப்படுத்தியது என்பதால், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இக்கதையைப் பற்றி நான் கூறினால் முழு படத்தையும் வெளியிடுவது போல் ஆகிவிடும்.
எனது அண்ணியைப் படப்பிடிப்பில் பார்க்கும்போது வீட்டில் எப்படியோ, அப்படித்தான் தோன்றினார். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால், அவர் பணிபுரிந்து நான் பார்த்ததில்லை. இங்குதான் பார்த்தேன். படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பே அன்றைக்கு உடுத்த வேண்டிய உடைகள், சிகை அலங்காரம் என்று முன்பே திட்டமிட்டு தயார் செய்து வைத்துவிடுவார். என்ன வசனம் பேசவேண்டும்? என்பதை முன்பே வாங்கி மனப்பாடம் செய்துவிட்டுப் படப்பிடிப்பு தளத்திற்குத் தயாராக வருவார். அவருடைய கலாச்சாரம் எனக்குப் பிடித்திருந்தது. அவர் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளப் பெரிய உழைப்பு தெரிந்தது.
இப்படத்தின் பலமே நடிகர்கள்தான். சத்யராஜ் சார் பாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இளவரசு இருக்கிறார். ‘சௌகார்’ ஜானகி அம்மா நடித்திருக்கிறார். அவருக்கு 88 வயதாகிறது. இதுவரை கிட்டதட்ட 400 படங்களில் நடித்துவிட்டார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கும். அனைத்துமே சுவாரஸ்யமான காட்சிகளாக இருக்கும். இத்தனை வயசானாலும் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறார். ஒருசில தோல்விகளிலேயே நாம் துவண்டு விடுகிறோம். ஆனால், அவர் இத்தனை ஆண்டு அனுபவத்தில் எத்தனை தோல்விகளைச் சந்தித்திருப்பார். இன்றும் தானே சமைத்துச் சாப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல், படக்குழுவிற்கு இரண்டு நாட்கள் சமைத்துக் கொடுத்திருக்கிறார். வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார். பணி என்று வந்துவிட்டால் நேர்மையாக இருக்கிறார். அவர் காலத்துக் கலாச்சாரம் நம்மை வியப்படைச் செய்கிறது.
இத்தனை படங்கள் நடித்துவிட்டோம். நமக்கு எல்லாம் தெரியும் என்றில்லாமல், இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று சத்யராஜ் சார் செயல்படுகிறார். முதல் படம் மாதிரி இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இத்தனை ஆண்டுகள் நடித்தாலும் சிறிதும் சலிப்படையாமல் ஆர்வத்துடன் ரசித்துச் செய்கிறார்.
ஜீத்து ஜோசப் படம் என்றால், அவர் கதையை நேர்த்தியாக நகர்த்திக் கொண்டுபோகும் விதம், கதாபாத்திரங்கள், அனைத்து நடிகர்களுக்கும் நடிப்பதற்கான சந்தர்ப்பம் இப்படி அனைவரும் என்ன எதிர்பார்த்து வருவார்களோ, அது அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. முக்கியமாக, உணர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கின்றது. இது மாதிரி நிறைவான படம் அரிதாகத்தான் வருகிறது.
ஒரு காதல் பாடல் இருக்கிறது. சின்மயி பாடியிருக்கிறார். த்ரில்லர் படம் என்பதால் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். அதை கோவிந்த் வசந்தா சிறப்பாகக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு உணர்வையும் தன் இசையின் மூலம் மேம்படுத்தியிருக்கிறார்''.
இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.