

'நந்தினி' சீரியல் நித்யா ராமுக்கும் தொழிலதிபரான கவுதமுக்கும் திருமணம் நடைபெற்றது.
'மொட்டு மனசே' என்ற கன்னடப் படத்தின் மூலமாகத் திரையுலகில் நடிக்க வந்தவர் நித்யா ராம். திரையுலகில் சரியான வாய்ப்புகள் அமையாமல் சீரியல் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இவர் நடித்த பல சீரியல்கள் ஒளிபரப்பாகின.
சுந்தர்.சி தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நந்தினி' சீரியல் இவரை மிகவும் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து கன்னடத்திலும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பலரும் இவரை 'நந்தினி' நித்யா ராம் என அழைக்கத் தொடங்கினார்கள்.
சில நாட்களுக்கு முன்பு நித்யா ராமுக்கும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதமுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது காதல் திருமணம் என்று வெளியான தகவலை நித்யா ராம் மறுத்திருந்தார். மேலும், திருமணம் எப்போது நடைபெறவுள்ளது என்ற தகவலையும் வெளியிடாமல் இருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நித்யா ராம். அவருக்கு சீரியல் நடிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, நித்யா ராம் ஆஸ்திரேலியாவில் குடியேறவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நித்யா ராம் இன்னும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
முன்பாக, 2014-ம் ஆண்டு வினோத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் நித்யா ராம். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.