

சண்டைக்காட்சிகளுடன் அஜித் நடித்து வரும் 'வலிமை' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக 'வலிமை' படத்தின் முதற்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. இதில் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் ஒப்பந்தம், படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, செட்கள் உருவாக்கம் முடிவு ஆகியவை நடைபெற்று வந்தன.
தற்போது அனைத்தும் முடிவடைந்து, ஹைதரபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முதற்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. இதில் முக்கிய சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு.
காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வருகிறார். இதற்காகத் தன் உடலமைப்பை மாற்றியுள்ளார். மேலும், நீண்ட நாட்கள் கழித்து இந்தப் படத்தில் டை அடித்து, கருப்பு முடியுடன் அஜித் தோன்றும் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
இதுவரை இந்தப் படத்தில் அஜித்துடன் நடிக்கவுள்ளவர்கள் பட்டியலைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், யாமி கெளதம் நாயகியாக நடித்து வருகிறார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கவுள்ளார். ‘வலிமை’ அடுத்த ஆண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.