

'வர்மா' படமே சிறந்தது. துருவ்வின் நடிப்புத் திறனுக்கு இயக்குநர் பாலாதான் காரணம் என்று ஒளிப்பதிவாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
'அர்ஜுன் ரெட்டி' ரீமேக் முதலில் தமிழில் 'வர்மா' என்ற பெயரில்தான் உருவானது. பாலா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் துருவ், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்த ரதன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்துவிட்டு, திருப்தியளிக்கவில்லை என்பதால் அப்படியே படத்தைக் கைவிட்டுவிட்டார்கள்.
அதன் பின்பு தான் 'ஆதித்ய வர்மா' உருவாகி வெளியானது. துருவ்வின் நடிப்புக்கு பலத்த வரவேற்பு இருந்தாலும், படமோ வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. தற்போது, துருவ் நடிக்கும் அடுத்த படத்துக்காகக் கதை கேட்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாலா இயக்கிய 'வர்மா' படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த சுகுமார், அந்தப் படம் தொடர்பான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் 'வர்மா' படம் தொடர்பாக அவர் பேசியதாவது:
"’வர்மா’ படத்தில் இயக்குநர் பாலாவுடன் பணிபுரிந்தது புதுவிதமான அனுபவம். அந்தப் படம் வெளியாக முடியாமல் போனதில் எங்களுக்கு வருத்தம் என்பதைவிட, ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்காமல் போகிறதே என்கிற ஆதங்கம்தான் அதிகமாக இருக்கிறது. நான் இரண்டு படங்களையும் பார்த்துவிட்டேன். நிச்சயம் பாலாவின் ’வர்மா’ ஒருபடி மேலே தான் இருக்கிறது..
இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தான் இயக்குநர் பாலா இயக்கினார். படம் சென்சாருக்குப் போகும் கடைசி நாள்வரை இந்தப் படத்தை நிறுத்துவதற்கான எந்த ஒரு அடையாளமுமே தென்படவில்லை. ஆனால், தான் பணியாற்றும் படங்கள் எல்லாம் ஹிட் ஆவதால் தன்னை எப்போதுமே அறிவுஜீவி என நினைத்துக் கொள்ளும் ஒரு முக்கியமான நபரின் தூண்டுதலால், தயாரிப்பாளர் வேறு வழியின்றி எடுத்த திடீர் முடிவு அது.
படத்தைப் பற்றிய விளக்கங்களை பாலாவிடம் கேட்டுவிட்டுப் பிறகு அவர்கள் முடிவெடுத்திருக்க வேண்டும். இயக்குநர் பாலாவைப் பொறுத்தவரை இந்தப் படத்தை விக்ரமுக்காகத்தான் இயக்கினார். நடிகர் விக்ரமுடன் எனக்கு 19 வருட நட்பு இருக்கிறது. அவர் தான் எனக்கு முதன்முதலாக ஸ்டில் போட்டோகிராபர் ஆக வாய்ப்பு கொடுத்தவர். அவரது மகன் துருவ்வுக்கும் முதன்முதலாக நான் தான் ஸ்டில் டெஸ்ட் எடுத்தேன் என்பது எனக்கு சந்தோஷமான விஷயம். அவரது குடும்பத்தில் ஒரு நபர் போலத்தான் நான்.
விஜய்யின் தீவிர ரசிகர் துருவ். அவரது படங்களை விரும்பிப் பார்ப்பவர். அதுமட்டுமல்ல இயல்பிலேயே அவருக்குள்ளும் நடிப்பு ஜீன் இருந்திருக்கிறது. அத்துடன் அமெரிக்கா சென்ற நடிப்புப் பயிற்சியும் பெற்று வந்தார். நாங்கள் ’ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது, அமெரிக்காவில் நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் அவர் நடித்துக் காட்டிக் கை தட்டல்களை, பாராட்டுகளை அள்ளிய வீடியோக்களை அவ்வப்போது தனது தந்தைக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார். அதை எல்லாம் எங்களிடம் காட்டி ரொம்பவே பெருமைப்படுவார் விக்ரம்.
துருவ்விடம் உள்ள ஒரு சிறப்பம்சம், அவர் தமிழில் பேசினால் தமிழ் நடிகர் மாதிரி தெரிவார். ஆங்கிலத்தில் பேசினால் அமெரிக்க நடிகர் போல அவரது முகமே மாறிவிடும். லோக்கலாகப் பேசினால் சென்னைப் பையன் போல, கொஞ்சம் மாடல் ஐடி இளைஞராகப் பேசினால் அதேபோல என அவரது முகத்தோற்றம் விதம் விதமாக மாறுவது அவருக்கு மிகப்பெரிய பிளஸ்.
’வர்மா’ படப்பிடிப்பின்போது எங்களுடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும் துருவ், அந்தப்படத்தின் டாக்டர் கதாபாத்திரத்திற்காக ஸ்டைலிஷாக ஆங்கிலம் பேசும்போது அவரது முகமே வேறுவிதமாக மாறுவதைக் கண்டு பாலாவே ஆச்சரியப்பட்டுப்போய், “இவன் அவங்க அப்பனையும் தாண்டிருவான்டா” என்று எங்களிடம் கூறியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.
அதேபோல சில காட்சிகளில் பாலா மீண்டும் ஒன்மோர் கேட்பார். அப்போது துருவ்வின் நடிப்பைப் பார்த்துவிட்டு ’அவங்க அப்பா மாதிரியே இருக்கிறார்’ என்று நான் கூறுவேன். அதற்கு பாலா, “ஆமாப்பா.. துருவ்கிட்ட அவங்க அப்பன் தெரியக்கூடாது.. அதனாலதான் ஒன்மோர் போலாம்னு சொன்னேன்” என்பார்.
’வர்மா’ படத்திற்குள் வரும்போது துருவ் எப்படி இருந்தார், அந்தப் படம் முடியும்போது ஒரு முழுமையான நடிகராக எப்படி மாறி இருந்தார் என்பதையெல்லாம் கூடவே இருந்து பார்த்தவன் நான். இப்பொழுது வெளியாகியுள்ள ’ஆதித்ய வர்மா’ படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருப்பதாகப் பேசப்படுகிறது என்றால் பாலா என்கிற சிற்பியின் கைவண்ணம் தான் அதற்குக் காரணம் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை..
சூர்யா நடித்த ’நந்தா’ படத்திலிருந்து இயக்குநர் பாலாவுடன் பணிபுரிந்துள்ளேன். அப்போது இருந்த பாலா வேறு, இப்போது இருக்கும் பாலா வேறு. அதனால் துருவ்விற்கு பாலா ரொம்ப கஷ்டம் கொடுக்கவில்லை. துருவ்வே உரிமை எடுத்துக்கொண்டு மாமா இன்னொரு முறை ஒன்மோர் பண்ணிக்கிறேனே என்று கேட்டால்கூட, இதுக்கு மேல நீ ஒன்மோர் பண்ணினாலும் எனக்கு இதுவே போதும் என்பார்..
சிறுவயதிலிருந்தே தான் பார்த்த, தூக்கி வளர்த்த குழந்தை என்பதால் துருவ்விற்கு படப்பிடிப்புத் தளத்தில் மிகுந்த சுதந்திரம் கொடுத்து அவரை மிகச் சிறந்த நடிகனாக மாற்றினார் பாலா. துருவ்விற்கு இது மிகவும் கொடுப்பினையான விஷயம்.
இனி வருங்காலத்தில் பாலா-துருவ் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த ஒரு படத்தில் ஏற்பட்ட வருத்தத்தால் விக்ரமுடனான பலவருட நட்பில் எந்த விரிசலும் விழவில்லை. ரீமேக் படம் என்பதால் பாலாவால் சிறப்பாகச் செய்ய முடியவில்லை அல்லது சிட்டி சப்ஜெக்ட் என்பதால் அவரால் அதைக் கையாள முடியவில்லை என்று சிலர் கூறுவதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சம்..
இன்னும் சொல்லப்போனால் பாலா இயக்கிய 'சேது' படம்தான் தெலுங்கில் ’அர்ஜுன் ரெட்டி’ ஆக மாறியது. அதே ’சேது’வைத்தான் இங்கே பாலா மீண்டும் உருவாக்கினார். ‘சேது’வில் தான் செய்ய நினைத்து முடியாமல் போன விஷயங்களை எல்லாம் இதில் அழகாகக் கொண்டு வந்திருந்தார். சொல்லப்போனால் ’சேது’ விக்ரமின் இன்னொரு அப்டேட் வெர்சன் தான் ’வர்மா’வில் நடித்த துருவ்வின் கதாபாத்திரம். நிச்சயம் இந்தப் படம் வெளியாகி ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை”.
இவ்வாறு சுகுமார் தெரிவித்தார்.