

சமீபத்திய அமிதாப் பச்சனின் படங்களில் 'ஷமிதாப்' படத்தை ரீமேக் செய்ய ஆசை என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, பிரதீக் பார்பர், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.
நேற்று (டிசம்பர் 16) மாலை இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. அந்தச் சமயத்தில் மும்பையில் 'தர்பார்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இதில் ரஜினி, சுனில் ஷெட்டி, ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன், பிரதீக் பார்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் ரஜினி.
பல நடிகர்கள் உங்களை ஆதர்சமாகப் பார்க்கிறார்கள். உங்களின் ஆதர்சம் யார்?
நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். அமிதாப் பச்சன்தான். கேமராவுக்கு முன்னால் மட்டுமல்ல, பின்னாலும் அவர்தான் ஆதர்சம். எங்கள் நட்புக்கு எடுத்துக்காட்டாகப் பல தருணங்கள் இருக்கின்றன. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். 60 வயதுக்குப் பிறகு மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒரு முறை சொன்னார்.
மூன்று விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய். தினமும் வேலை பார்த்துக்கொண்டே இரு. யார் என்ன சொன்னாலும் சரி, தினமும் வீட்டை விட்டு வெளியே செல். அரசியலுக்கு வராதே என்று சொன்னார். இதெல்லாம் நான் அவரிடமிருந்து தான் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால் சூழ்நிலைகள் காரணமாக என்னால் அவரது மூன்றாவது அறிவுறுத்தலைக் கேட்க முடியவில்லை. திரையில் நான் நன்றாக நகைச்சுவை செய்கிறேன் என்று சொல்வார்கள். அதெல்லாம் நான் அமிதாப் பச்சனிடமிருந்து கற்றதுதான்.
கடந்த 5-10 வருடங்களில் அமிதாப் பச்சன் நடித்த எந்தப் படத்தை ரீமேக் செய்ய ஆசை?
ஷமிதாப்.
உங்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருந்தும் ஏன் ஒரே ஒரு ஹாலிவுட் படத்தில்தான் நடித்திருக்கிறீர்கள்?
சரியான வாய்ப்பு, கதை, கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
மும்பையில் எது பிடிக்கும்?
ஒரு குறிப்பிட்ட இடம் என்றில்லை. மொத்த மும்பையுமே எனக்குப் பிடிக்கும்.
இவ்வாறு ரஜினி பதிலளித்தார்