

அப்பாவுக்காக நடிப்பைக் கைவிட்டவர் சுனில் ஷெட்டி என்று ரஜினி பாராட்டிப் பேசிய போது, மேடையிலிருந்த சுனில் ஷெட்டி அழுதுவிட்டார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, பிரதீக் பார்பர், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.
நேற்று (டிசம்பர் 16) மாலை இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. அப்போது மும்பையில் 'தர்பார்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இதில் ரஜினி, சுனில் ஷெட்டி, ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன், பிரதீக் பார்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் ரஜினி.
அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்து முடித்தவுடன், மேடையிலிருந்த சுனில் ஷெட்டி பற்றிப் பேசினார் ரஜினி. அதில், "சுனில் ஷெட்டி பற்றி சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். 4 வருடங்கள் கழித்து அவர் நடிக்க வந்திருக்கிறார். அவரது தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாதல். இந்த நான்கு வருடங்கள் தனது அப்பாவுக்காக சுனில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்திருக்கிறார்.
அவரைப் பாராட்ட வேண்டும். தந்தை சரியான பிறகுதான் சுனில் நடிக்க வந்திருக்கிறார். அவர் என்னைப் பாராட்டுகிறார். ஆனால் அவரே மிக எளிமையானவர்தான். படத்தின் கடைசியில் நாங்கள் ஒரு சண்டைக் காட்சியில் நடித்தோம். அதில் எனக்கு எந்த விதமான சிரமமும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அற்புதமான மனிதர். அவருடன் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி" என்று பேசினார் ரஜினி.
அப்படிப்பட்ட சுனிலுக்கு ஒரு முறை கை தட்டுங்கள் என்று ரஜினி கூற, அங்கிருந்த அனைவரும் கை தட்டினார்கள். இந்தப் பேச்சைக் கேட்டு சுனில் ஷெட்டி மேடையிலேயே அழுதுவிட்டார்.