

'தர்பார்' படத்தில் நடிக்கக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன் என்று மும்பையில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி தெரிவித்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, பிரதீக் பார்பர், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.
நேற்று (டிசம்பர் 16) மாலை இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. அப்போது மும்பையில் 'தர்பார்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இதில் ரஜினி, சுனில் ஷெட்டி, ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன், பிரதீக் பார்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் ரஜினி.
'தர்பார்' படத்தின் கதை எந்த வகையில் உங்களுக்குப் பிடித்திருந்தது?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு போலீஸ் வேடத்தில் நடிக்கப் பிடிக்காது. அதற்கென்று நிறைய பொறுப்புகள் உள்ளன. எனக்கு இலகுவான, ஜனரஞ்சகமான கதாபாத்திரங்கள்தான் பிடிக்கும். போலீஸ் என்றால் சீரியஸாக இருக்க வேண்டும். அதனால் போலீஸ் கதாபாத்திரங்கள் வந்தால் தவிர்த்துவிடுவேன். முருகதாஸ் ஒரு நல்ல கதையோடு வந்தார். நான் 'மூன்று முகம்' படத்தில் நடித்த அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் மிகப் பிரபலமானது. அதன் பிறகு இந்தப் படத்தில் ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரம் வழக்கமான போலீஸ் கதாபாத்திரமாக இல்லை. முற்றிலும் வித்தியாசமானது.
நீங்கள் இதுவரை நடித்துள்ள போலீஸ் கதாபாத்திரங்களில் உங்களுக்குப் பிடித்தது எது? ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரத்தில் என்ன வித்தியாசமாகத் தெரிந்தது?
இந்தக் கதாபாத்திரத்துக்கென படத்தில் பெரிய சோகம் இருக்கிறது. அலெக்ஸ் பாண்டியனை மிஞ்சவில்லை என்றாலும் அதற்குச் சரிசமமாகவாவது ஏதாவது செய்ய வேண்டும் என முருகதாஸ் அதிகம் சிந்தித்திருக்கிறார். ஏனென்றால் அதோடு ஒப்பிட்டு ரசிகர்கள் ஏமாற்றமடையக் கூடாது என்பதற்காக. அதனால் மிகக் கவனமாக இந்த கதாபாத்திரத்தைச் செதுக்கியிருக்கிறார். அதனால் இது கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும். இதில் நடிக்க நான் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஏனென்றால் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு மனதுக்குள் பெரிய பாரத்தை வைத்துக் கொண்டு எப்படி நடிப்பது என்று யோசித்தேன். அதனால் சில காட்சிகளில் நடிப்பது கடினமாக இருந்தது. ஆனால் முருகதாஸ் அதை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.
இவ்வாறு ரஜினி பதிலளித்தார்.