

ஷிமோகாவில் விஜய்யைப் பார்க்கத் தினமும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருப்பதால், 'தளபதி 64' படக்குழு பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஷிமோகா பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்புக்கு ராயல் ஆர்சிட் என்ற ஹோட்டலிருந்து சென்று வருகிறார் விஜய். தினமும் அவர் படப்பிடிப்புக்குச் செல்லும் போது, படப்பிடிப்புக்கு முடிந்து ஹோட்டலுக்கு வரும் போது ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வந்தன.
இந்நிலையில், தினமும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதால் 'தளபதி 64' படக்குழுவினர் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எப்படியென்றால், தினமும் ஹோட்டலைக் கடந்து விஜய் வருவதற்கு அதிக நேரம் ஆவது மட்டுமன்றி, சில சமயங்களில் அவருடைய காரையும் பின்தொடர்ந்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிடுகிறார்களாம் ரசிகர்கள்.
இதனால், ரசிகர்களைக் கட்டுப்படுத்தவே தனியாக ஒரு குழுவை நியமித்திருக்கிறார்கள். மேலும், படப்பிடிப்பு முடிந்து விஜய் ஹோட்டலுக்கு திரும்பும்போது, ரசிகர்களுக்குத் தெரியாமல் இருக்க வெவ்வேறு காரில் அனுப்பிவைக்கிறார்கள்.
இன்று (டிசம்பர் 16) விஜய்க்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று ஒரு பிரம்மாண்டமான மாலையை க்ரேன் மூலமாகக் கொண்டு வந்துள்ளனர் ரசிகர்கள். இதனால் அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன செய்வது எனக் கண்முழிப் பிதுங்கி நிற்கிறது படக்குழு.
இந்த மாதம் இறுதிவரை அங்குப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டது படக்குழு. ஆனால், முன்பே முடித்துவிட்டு, அரங்கம் அமைத்து சில காட்சிகளை எடுக்கலாமா என்ற ஆலோசனையிலும் இறங்கியுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் மாளவிகா மோகன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண், தீனா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஜனவரிக்குள் முழுமையான படப்பிடிப்பை முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.