

யூடியூப் தளத்தின் மூலம் பிரபலமாகி, நடிகராகவும் பேச்சாளராகவும் வலம் வரும் ராஜ்மோகன் விரைவில் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
யூடியூப் தளத்தில் உள்ள 'புட் சட்னி' பக்கத்தின் மூலம் பிரபலமானவர் ராஜ்மோகன். அதனைத் தொடர்ந்து ப்ளாக் ஷீப் அணியினருடன் இணைந்து பல்வேறு வீடியோக்களில் தோன்றியுள்ளார். இவரது தமிழ்ப் பேச்சுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
'நட்பே துணை', 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்மோகன் நடித்துள்ளார். மேலும், பல பட்டிமன்றங்களிலும் பேசியுள்ளார். தற்போது தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் ராஜ்மோகன். இந்தப் படத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் 'ப்ளாக் ஷீப்' யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்களே நடிக்கவுள்ளதாகவும், ராக் ஃபோர்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க காமெடி பின்னணி கொண்ட கதையொன்றைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் ராஜ்மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.