ரசிகைக்கு வளைகாப்பு அணிவித்த ரஜினி: குழந்தைக்கு ரஜினி குடும்பத்தினர் பெயரை வைக்க முடிவு

ரசிகைக்கு வளைகாப்பு அணிவித்த ரஜினி: குழந்தைக்கு ரஜினி குடும்பத்தினர் பெயரை வைக்க முடிவு
Updated on
2 min read

தன் ரசிகையின் ஆசைப்படி, அவருக்கு வளைகாப்பு அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ரஜினி.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ராக விக்னேஷ். இவர் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வீடியோ எடுப்பவராகப் பணியாற்றுகிறார். இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி. இருவரும் சின்ன வயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகர்கள்.

தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் ஜெகதீஸ்வரிக்கு, ரஜினி கையால் வளைகாப்பு போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை, கரு தரித்த உடனேயே வந்துவிட்டது. தன்னுடைய ஆசையைக் கணவரிடம் சொல்ல, எப்படியாவது நிறைவேற்றி வைக்க வேண்டும் என மனதுக்குள் சபதமெடுத்துக் கொண்டார் ராக விக்னேஷ். தனக்குத் தெரிந்த சினிமா நண்பர்கள் மூலம் ரஜினிக்குத் தகவல் சொல்ல முயற்சி செய்தார்.

ஆனால், அதுமட்டுமே தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைக்காது என்பதை உணர்ந்தவர், தானும் களத்தில் இறங்கினார். ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுப் பக்கம் அடிக்கடி சென்று, யார் மூலமாவது தன் மனைவியின் ஆசையை ரஜினியிடம் தெரியப்படுத்திவிட முடியுமா என்று முயற்சி செய்தார்.

அவரைத் தன் வீட்டுப் பக்கம் அடிக்கடி பார்த்த ரஜினி, ஒருநாள் காரை நிறுத்தி, அவரை அழைத்து விசாரித்தார். ராக விக்னேஷ் தன் மனைவியின் ஆசையைச் சொல்ல, தன் உதவியாளரிடம் மொபைல் நம்பரைக் கொடுத்துவிட்டுப் போகச் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், ஜெகதீஸ்வரியின் கனவு, நனவாகியிருக்கிறது. ரஜினியைச் சந்திக்க ‘தர்பார்’ படப்பிடிப்புத் தளத்துக்கு வரச்சொல்லி, கடந்த டிசம்பர் 14-ம் தேதி ரஜினி தரப்பில் இருந்து ராக விக்னேஷுக்குப் போன் வந்தது. ரஜினி தனக்கு என்னென்ன வளையல்கள் அணிவிக்க வேண்டும் என்பதையும் ஜெகதீஸ்வரியே முடிவுசெய்து, வாங்கிச் சென்றார்.

“அப்பாவை (ரஜினி) முதன்முதலில் பார்த்த அந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது. நாங்கள் சென்றபோது, அவருக்கான காட்சி படமாக்கப்பட இருந்தது. ‘கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க’ என பணிவாகச் சொல்லிவிட்டு நடிக்கச் சென்றார். அவரை எல்லோருக்கும் பிடிக்க இந்தக் குணமும் ஒரு காரணம்” என நெகிழ்கிறார் ஜெகதீஸ்வரி.

படப்பிடிப்பு முடிந்ததும் உடை மாற்றிவிட்டு, படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்களோடு கேரவனுக்குள் புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினி. ஜெகதீஸ்வரி கேரவனுக்குள் ஏறி இறங்க கஷ்டமாக இருக்கும் என்பதால், ‘அவரைச் சிரமப்படுத்த வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டு, தானே கீழே இறங்கி வந்தார்.

“தலைவரைப் பார்த்ததும் நானும் மனைவியும் அவர் காலில் விழுந்தோம். ‘அதெல்லாம் வேண்டாம், உடம்ப கஷ்டப்படுத்திக்காதம்மா’ என என் மனைவியிடம் அக்கறையோடு பேசினார். என் மனைவிக்கு அவர் வளையல் அணிவித்த தருணத்தின் சந்தோஷத்தில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. இதெல்லாம் நடக்குமா? என ஆச்சரியப்பட்ட விஷயம், தற்போது நிறைவேறியிருக்கிறது. மனைவியின் மிகப்பெரிய ஆசையை நிறைவேற்றி வைத்துவிட்டேன். இனிமேல் வேறெதுவும் கேட்க மாட்டாங்கனு நினைக்கிறேன்” என்றார் ராக விக்னேஷ்.

தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கும் ரஜினி குடும்பத்தினர் பெயரையே வைக்க முடிவு செய்துள்ளனர் இந்தத் தம்பதியர். ஆண் குழந்தை பிறந்தால் ரஜினி என்றும், பெண் குழந்தை பிறந்தால் லதா, ஐஸ்வர்யா, செளந்தர்யா இந்த மூவரில் ஏதாவது ஒருவரின் பெயரையும் வைக்கவுள்ளனர். அந்தப் பெயரையும் ரஜினியே தன் வாயால் சொல்லி வைக்க வேண்டும் என்பதும் இவர்களின் ஆசை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in