சினிமாவுக்குச் சென்றாலும் வாரம் ஒரு யூடியூப் வீடியோ வந்தே தீரும்: 'பரிதாபங்கள்' குழு உறுதி

சினிமாவுக்குச் சென்றாலும் வாரம் ஒரு யூடியூப் வீடியோ வந்தே தீரும்: 'பரிதாபங்கள்' குழு உறுதி
Updated on
1 min read

சினிமாவுக்குச் சென்றாலும் வாரம் ஒரு யூடியூப் வீடியோ வந்தே தீரும் என்று 'பரிதாபங்கள்' குழுவைச் சேர்ந்த கோபியும் சுதாகரும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

யூடியூப் தளத்தில் மிகவும் பிரபலமான பக்கம் 'பரிதாபங்கள்'. இதில் கோபி - சுதாகர் இருவரும் அரசியல்வாதிகள், நிகழ்வுகள் தொடர்பாகச் செய்யும் கிண்டல் வீடியோக்கள் தொடர்ச்சியாக ட்ரெண்டிங் ஆவதுண்டு.

தற்போது கிரவுட் ஃபண்டிங் முறையில் சினிமா தயாரிப்பு நிறுவனமான 'பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ்' என்னும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கவுள்ள இந்தப் படத்துக்கு 'ஹே மணி கம் டுடே Go டுமாரோ' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 15) நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், ராதாரவி மற்றும் யூடியூப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த விழாவில் கோபி - சுதாகர் பேசியதாவது:

"யூடியூப்பில் எங்களுக்கு அடையாளம் கொடுத்தது பரிதாபங்கள் என்ற வார்த்தைதான். அதனால் அதையே தயாரிப்பு நிறுவனத்தின் பெயராகவும் வைத்தோம். பரிதாபங்கள் வீடியோக்கள் எப்படி ஒரு விஷயத்தை எடுத்து காமெடியாக சொல்லியிருப்போமோ, அதே போல 'ஹே மணி கம் டுடே Go டுமாரோ' படத்திலும் ஒரு விஷயத்தை எடுத்து காமெடியாகச் சொல்லவுள்ளோம்.

நாங்கள் இருவரும் நடிப்பது மட்டுமே இப்போதைக்கு உறுதியாகியுள்ளது. எம்.எஸ்.பாஸ்கர் சாரிடம் பேசியுள்ளோம். இன்னும் சிலரிடம் பேசியுள்ளோம். அவர்கள் யாரும் இன்னும் அதிகாரபூர்வமாக ஒப்பந்தமாகவில்லை. இந்தத் தலைப்புதான் படமே. பணம் முக்கியம்தான். அதற்காக வாழ்க்கையை ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக்கிக் கொள்ள வேண்டாம் என்பதைத் தான் சொல்லவுள்ளோம்.

சினிமாவுக்குச் சென்றாலும் வாரம் ஒரு யூடியூப் வீடியோ வந்தே தீரும். எங்களுக்கும் யாராவது content கொடுத்தால், நாங்கள் வீடியோக்கள் விட்டுக் கொண்டே இருப்போம். கண்டிப்பாக, இந்தப் படத்தை உலக அளவில் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எங்களால் எந்த அளவுக்கு முடிகிறதோ அந்த அளவுக்குப் பிரம்மாண்டமாக வெளியிடுவோம்.

படம் பண்றோம் என்பதைத் தாண்டி இந்த மாடலை வெற்றியடைய வைத்தே ஆக வேண்டும். அப்படி வெற்றியடைந்தால் மட்டுமே பலரும் இதைப் பின் தொடர்வார்கள். அதற்கான ஒரு சின்ன தொடக்கமாக எங்கள் முயற்சி இருக்கும்".

இவ்வாறு கோபி - சுதாகர் ஆகிய இருவரும் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in