

‘எப்போ வருவாரோ எந்தன் கலிதீர..’ - இது கர்னாடக சங்கீத கச்சேரி மேடைகளில் ஒலிக்கும் பிரபல பாடல். பக்தரின் குறை தீர்க்க தில்லை சிதம்பரநாதன் எப்போ வருவாரோ? என்று கேட்பதுபோல கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய சாகித்யம் அது.இதேபோல, இசை ரசிகர்களுக்கு பெரும் குறை என்றால், ‘எந்த சபாவில் எந்த கச்சேரி?’ என்று தேடித் தேடி கண்டுபிடிப்பதுதான். இந்த குறையைத் தீர்க்கும் விதமாக, மார்கழி இசை விழா மும்முரமாக தொடங்கியிருக்கும் இந்த வேளையில், அறிமுகமாகி இருக்கிறது ‘எப்போ ஈவென்ட்’ (Eppo Event) செயலி.
அமெரிக்காவை சேர்ந்த விஸ்வநாதன் சுப்பிரமணியன், பாஸ்கர் சீனிவாசன் இதை உருவாக்கியுள்ளனர்.
இந்த செயலியை பிகேஆர்எஸ் எல்எல்சி நிறுவனம் சார்பில் மயிலாப்பூர் ராகசுதா அரங்கில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் டாக்டர் நல்லி குப்புசாமி, நெய்வேலி சந்தான கோபாலன், காயத்ரி வெங்கட்ராகவன், சவிதா ராம் ஆகியோர் வெளியிட்டனர்.
நல்லி குப்புசாமி பேசும்போது, ‘‘பொதுவாக மார்கழி இசை, நாட்டிய விழாக்கள் எந்தெந்த சபாக்களில் நடக்கின்றன என்ற விவரங்கள் பல இணையதளங்களில் வெளியாகின்றன. அவற்றில்கூட டிசம்பர் சீசன் நிகழ்ச்சிகள் மட்டுமே வெளியிடப்படும். ஆனால், ‘எப்போஈவென்ட்’ செயலி ஆண்டு முழுவதும் செயல்பாட்டில் இருக்கும் என்பது இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி’’ என்றார்.
இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, கலைஞர்களும் பயனடைவார்கள் என்று நெய்வேலி சந்தானகோபாலன், காயத்ரி வெங்கட்ராகவன் கூறினர்.
‘‘கர்னாடக இசை நிகழ்ச்சி, நடனம், நாமசங்கீர்த்தனம், உபன்யாசம், ஆன்மிக சொற்பொழிவுகள் எங்கு, எத்தனை மணிக்கு நடக்கி
றது என்பதை இந்த செயலி மூலம் அறியலாம். வரவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது, நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சென்றடையும் வழி, பாடல்கள் குறித்த விவரங்களைப் பெறும் வசதியும் இருக்கிறது’’ என்றார் பாஸ்கர் சீனிவாசன்.