

தன் பேச்சுக்குத் தொடர்ச்சியாகப் பலரும் திட்டிவந்த நிலையில், 'அன்புதான் தமிழ்' என்ற புதிய சேவை அமைப்பைத் தொடங்கியுள்ளார் லாரன்ஸ்
சமீபத்தில் சென்னையில் ரஜினி நடித்த 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் லாரன்ஸ் பேசும் போது, கமலைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் சர்ச்சையை உண்டாக்கியது. இதற்கு உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்தார். ஆனால், தொடர்ச்சியாக கமல் ரசிகர்கள் லாரன்ஸை கடுமையாக விமர்சித்து வந்தார்கள். மேலும், 'தர்பார்' விழாவில் சீமான் குறித்து லாரன்ஸ் பேசியதை வைத்து, அவரை நாம் தமிழர் கட்சியினர் திட்டித் தீர்த்தார்கள்.
ரஜினி பிறந்த நாள் விழாவில் பேசும் போது கமல் குறித்துப் பேசியது ஏன் என்பதற்கான விளக்கமளித்தது மட்டுமன்றி, கமலை நேரிலும் சந்தித்து அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் லாரன்ஸ். ஆனால், ரஜினி பிறந்த நாள் பேச்சில் சீமானைக் கடுமையாகச் சாடினார். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியினர் லாரன்ஸை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள்.
தற்போது இந்தச் சர்ச்சைகள் தொடர்பாக ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் வணக்கம். நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். இதுவரை என்னைத்தான் தவறாகப் பேசிக்கொண்டிருந்தார்கள், இப்பொழுது தாய் தந்தையரைப் பற்றியும் மிகத் தவறாகப் பேசுகிறார்கள். மொழியை ஒரு போர்வையாகப் பயன்படுத்திக் கொண்டு தவறாகப் பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும்.
நான் ஒரு தனி மனிதன்!
எனக்கென்று தனிக் கூட்டமில்லை!
நான் படிக்காதவன்!
ஒரு தனி மனிதனாய் நின்று.....
"அன்புதான் தமிழ்" என்கிற அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பைத் தொடங்குகிறேன்! இந்த அமைப்பின் மூலம், தமிழரின் மாண்பையும், தமிழரின் பண்பையும், தமிழரின் அன்பையும், உலகறிய செய்வதே அதன் நோக்கம்
"இன்னார் செய்தாரை ஒறுத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்!"
என்பது திருக்குறள் அதைப் பின்பற்றியே,
"எதிரிக்கும் உதவி செய்!
பிறர் துன்பங்களை உன் துன்பமாக நினை!
நாமெல்லாம் உருவத்தால்தான் வெவ்வேறு!
உள்ளத்தால் ஒன்றே!
கடவுளை வெளியே தேடாதே!
உனக்குள் இருக்கிறார்!
எனக்கு இது போதும் என்று நினை!
ஆசையை விடு!
அள்ளிக்கொடு!
ஆண்டவன் உன் பக்கம்!"
அந்த ஆண்டவன் இருப்பது உண்மையானால், தர்மம் இருப்பது உண்மையானால், என்வழி உண்மையானால், நான் துவங்கும் இந்த அறம் சார்ந்த சேவை அமைப்பிற்கு இந்த பிரபஞ்ச சக்தி துணை நிற்கட்டும்.
இறுதியாக ஒன்று. என்னைத் தவறாகப் பேசிக் கொண்டிருப்பவர்களும், அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும், நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.