வெரைட்டி காட்டிய மோகன் ; ‘மைக்’படங்கள் குறைவுதான்! 

வெரைட்டி காட்டிய மோகன் ; ‘மைக்’படங்கள் குறைவுதான்! 
Updated on
3 min read

வி.ராம்ஜி

‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தையடுத்து அதே வருடத்தில் வரிசையாக நடிக்கத் தொடங்கினார் மோகன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கேரக்டர்களில் நடித்தார்.

’கோகிலா’ எனும் கன்னடப் படத்தில், பாலுமகேந்திரா இயக்கத்தில் நடித்த மோகன், தமிழில் ‘மூடுபனி’ படத்தில் மோகனை அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தின் டைட்டிலில், ‘கோகிலா’ மோகன் என டைட்டிலில் பெயர் வந்தது. படத்திலும் சின்ன கேரக்டர்தான் செய்தார் மோகன்.

இதன் பிறகு, இயக்குநர் மகேந்திரன் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடித்தார் மோகன். இதில் அருமையான கதாபாத்திரம் அவருக்கு. டைட்டிலில் சரத்பாபு, பிரதாப், மோகன் என்று வந்தது.

இதன் பின்னர், இயக்குநர் துரை இயக்கத்தில், டி.ராஜேந்தரின் பாடல்கள் மற்றும் இசையில் வெளியானது ‘கிளிஞ்சல்கள்’. ஒருவகையில் மோகனும் சரி, தமிழ்த் திரைப்படமும் சரி... இந்தப் படத்தை மறக்கவே முடியாது. டைட்டிலில் மோகன் என்று தனியாகவும் முதன்மையாகவும் போடப்பட்டது. அதேபோல், தனி நாயகனாக மோகன் வலம் வந்து அசத்திய முதல், முக்கியமான படம் இது.

அதுமட்டுமா? மோகன் படத்தில் எல்லாப் பாடல்களும் முதன்முதலில்ஹிட்டானது என்றால் அது ‘கிளிஞ்சல்கள்’ படத்தில்தான். இன்னொரு தகவல்... மோகனும் பூர்ணிமா ஜெயராமும் (பூர்ணிமா பாக்யராஜ்) இணைந்து நடித்த முதல் படமும் இதுவே!

இந்தப் படம் 1981-ம் ஆண்டு டிசம்பரில் வந்தது. 82ம்-ம் ஆண்டு பிறந்தது. பிப்ரவரி மாதத்தில் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில், மோகன், பூர்ணிமா ஜெயராம் நடித்த ‘பயணங்கள் முடிவதில்லை’ வெளியானது. இதை நூறுநாள் படம், நூற்றம்பைது நாள் படம், சில்வர் ஜூப்ளி படம், 200 நாள் படம், ஒரு வருடத்தைக் கடந்து ஓடிய படம் என எல்லா வெற்றிப்பட வரிசைக்குள்ளும் அமைந்தது. மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது இந்தப் படம்.
கோவைத்தம்பி, மதர்லேண்ட் பிக்சர்ஸ், இளையராஜா, மோகன் என்பது மட்டுமே எல்லாப் படங்களிலும் இருக்கும். மற்ற நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் என மாறிக்கொண்டிருப்பார்கள். கோவைத்தம்பி படத்தில், கெளரவ வேடத்திலாவது நடித்திருப்பார் மோகன். அப்படியொரு சென்டிமென்ட் கோவைத்தம்பிக்கு.

‘பயணங்கள் முடிவதில்லை’ படம் வந்தது. பாடல்கள் செவிகளுக்குள் புகுந்துகொண்டன. மோகன் ரசிக நெஞ்சங்களுக்குள் நுழைந்தார். அதேவருடத்தில், கே.என்.சுப்பு இயக்கத்தில், சிவாஜி ராஜா இசையில், ராதாவுடன் நடித்தார் மோகன். அந்தப் படம் ‘காற்றுக்கென்ன வேலி’. படம் கலகலவெனச் செல்லும். இயல்பான கதையில் அழகாகப் பொருந்தியிருந்தார் மோகன்.

இதேவருடத்தில், ராம.நாராயணன் இயக்கத்தில், ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ என்ற படத்தில் நடித்தார் மோகன். இதிலும் பூர்ணிமா நாயகி. இந்தப் படத்தில், ப்ளேபாய் கேரக்டரில் பின்னியிருப்பார் மோகன். இந்தப் படமும் சரி... இதற்கு முந்தைய படங்களும் சரி... மோகனுக்கு ரசிகர்களை அதிகப்படுத்திக்கொண்டே இருந்தன. ஏனெனில், ஒவ்வொரு கேரக்டரிலும் வெரைட்டி காட்டிக் கொண்டே வந்தார்.

வெங்கட் இயக்கத்தில், பூர்ணிமா ஜெயராமுடன் மோகன் நடித்த ‘அந்த சில நாட்கள்’ திரைப்படம், காமெடியும் குடும்ப கட்டமைப்பும் கொண்டு வெளியான படம். படத்தின் காமெடியும் வசனங்களும் பேசப்பட்டன. இளையராஜா இசை.


இந்த சமயத்தில்தான் பாரதிராஜாவிடம் இருந்து வெளியே வந்து தனியே படம் பண்ண மணிவண்ணன் வந்தார். இளையராஜாதான், மணிவண்ணனின் திறமையை இனம் கண்டு தயாரிப்பாளரிடம் சொன்னார். வாய்ப்பு கிடைத்தது. படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுதான்... ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. மோகனுடன் சுஹாசினி, ராதா முதலானோர் நடித்திருந்தனர். கிராமத்து அருக்காணியை திருமணம் செய்துகொண்டு, பின்னர் தான் ஆசைப்பட்டபடி நகர நாகரீகங்களுடன் திகழும் ராதாவுடன் வாழ்க்கைநடத்தும் மோகன், அந்தத் தவிப்பையும் ஏமாற்றத்தையும் ஏமாறுவதையும் குற்ற உணர்ச்சியையும் வெகு அழகாக, பாந்தமாக வெளிக்காட்டி நடித்திருப்பார்.

இப்படி ஆரம்பத்திலேயே நெகட்டீவ் ரோல்களில் நடித்து பெயர் வாங்கினார் மோகன். இன்றைக்கு ‘மைக்’ மோகன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் 82-ம் ஆண்டு வந்த படத்தில் மைக்கைப் பிடித்துக்கொண்டு பாடியது ஒரே படத்தில்தான். அது ‘பயணங்கள் முடிவதில்லை’ மட்டும்தான்.
83-ம் ஆண்டும் அப்படித்தான்.

மணிவண்ணனின் ‘இளமைக் காலங்கள்’ கல்லூரி, காதல், பிரிவு, சோகம் என சகலத்தையும் குளிரக்குளிரச் சொன்னது. இந்தப் படத்திலும் அசாத்தியமான நடிப்பைத் தந்திருந்தார் மோகன். எல்லாப் பாடல்களும் ஹிட். சசிகலாதான் நாயகி.

அதேபோல், ‘சரணாலயம்’ படமும் அப்படித்தான். இதில் நளினி நாயகி. கல்லூரிக் கதை. காதல் கதை. மிகுந்த முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மோகன்.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் ‘தூங்காத கண்ணின்று ஒன்று’ படமும் வித்தியாசமான படம். அம்பிகா மோகனுடன் நடித்தார். மெல்லிய, ஆழமான காதலைச் சொன்ன படம். இதேபோல், பூர்ணிமா ஜெயராமுடன் நடித்த ‘நாலு பேருக்கு நன்றி’ திரைப்படமும் வேறுவிதமான படமாக அமைந்தது.
பாரதிராஜாவிடம் இருந்து மணிவண்ணன் வந்தது போல், கே. ரங்கராஜும் வந்து படம் பண்ணினார். ’நெஞ்சமெல்லாம் நீயே’ என்ற அந்தப் படத்தில், பாடகியாக ராதா நடித்திருந்தார். அவரின் கணவராக மோகன் நடித்தார். இருவரும் கருத்துவேறுபாட்டால் பிரிந்துவிட, பிறகு பூர்ணிமா ஜெயராமை சந்திக்க, அங்கே மறுபடியும் காதல் மலருகிறது. பிறகு மோகனும் ராதாவும் சேர்ந்தார்களா என்பதைச் சொன்னது திரைக்கதை.
கலைமணியின் தயாரிப்பில், ராம.நாராயணன் இயக்கத்தில், மோகன் நடித்த ‘மனைவி சொல்லே மந்திரம்’ திரைப்படமும் அதே வருடத்தில், 82-ம் ஆண்டில்தான் வெளியானது. நளினி ஜோடியாக நடித்திருந்தார். காமெடிக்கு முக்கியத்துவம் எடுத்து எடுக்கப்பட்ட இந்தப் படமும் மோகனின் வெரைட்டி கேரக்டர் வரிசையில் இடம்பெற்றது.

’பயணங்கள் முடிவதில்லை’, ‘உனக்காக ஒரு ரோஜா’, ‘உதயகீதம்’, ‘உன்னை நான் சந்தித்தேன்’ முதலான சில படங்களில் மட்டும்தான் மோகன் மைக் வைத்துக்கொண்டு பாடினார். அதனாலேயே அவரை மைக் மோகன் என எப்படி அழைக்கமுடியும்?

இன்னும் சொல்லப்போனால், ‘நூறாவது நாள்’, ‘24மணி நேரம்’, ‘பிள்ளைநிலா’, ‘குங்குமச்சிமிழ்’ என எத்தனையோ படங்கள், வெவ்வேறுவிதமான கேரக்டர்களைக் கொண்டே வெற்றி பெற்றன. சொல்லப்போனால், நல்ல கேரக்டர், நெகட்டீவ் குணம் கொண்ட கேரக்டர் என்ற பாகுபாடெல்லாம் பார்த்ததே இல்லை மோகன்.

அப்படியொரு வெரைட்டி நாயகனாக கலக்கியெடுத்தவர் மோகன். அவர் ‘மைக்’ மோகன் அல்ல. அடைமொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட சில்வர்ஜூப்ளி நாயகன் என்று இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in