

ஹைதராபாத்தில் ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதால், ரஜினி - அஜித் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'தர்பார்' படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைக்கும் இந்தப் படம் பாடல் காட்சிகள் படப்பிடிப்புடன் தொடங்கியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
அதே போல், 'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதுவரை அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை. ஜீ ஸ்டுடியோஸ் வழங்க முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார் போனி கபூர். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இவ்விரண்டு படப்பிடிப்புமே அருகே அருகே நடைபெற்று வருவதால், ரஜினி - அஜித் சந்திக்க வாய்ப்புகள் அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற 'அசல்' படத்தின் பூஜையில் தான், ரஜினி - அஜித் சந்தித்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகு இருவரும் 'பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அந்த விழாவில் அஜித் தைரியமாகப் பேசியதற்கு எழுந்து நின்று கைதட்டினார் ரஜினி.
இதனைத் தொடர்ந்து இருவரும் எந்தவொரு விழாவிலும் சந்தித்துக் கொண்டதில்லை. தற்போது அருகருகே படப்பிடிப்பு நடப்பதால், ரஜினி - அஜித் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்று திரையுலகினர் தெரிவிக்கிறார்கள். மேலும், அடுத்தாண்டு ரஜினி கட்சித் தொடங்கவுள்ளதால், அஜித்துடனான சந்திப்பு நடைபெற்றால் அரசியல் வட்டாரத்திலும் விவாதமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.