

விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா ஒப்பந்தமாகியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஷிமோகா பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலிலும் விஜய் ரசிகர்கள் குழுமி வருகிறார்கள். விஜய் படப்பிடிப்புக்குச் செல்லும் போதெல்லாம் அவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டுச் செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் தினமும் வெளியாகி வருகிறது.
இந்தப் படத்தில் மாளவிகா மோகன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். தற்போது 'கைதி' படத்தில் கவனம் ஈர்த்த தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரும் ஹைதராபாத் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
சுமார் 50% படப்பிடிப்பு வரை முடிந்துவிட்டது. ஜனவரிக்குள் முழுமையான படப்பிடிப்பை முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இன்னும் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் என எதுவுமே வெளியாகவில்லை. அதற்குள் படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சியும், டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைமும் கைப்பற்றியுள்ளன.