

'தர்பார்' ட்ரெய்லர் வெளியீடு எப்போது என்பதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 7-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி 'தர்பார்' ட்ரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கினார்கள். ஆனால், அன்றைய தினம் 'தர்பார்' படத்தின் புதிய போஸ்டர் மட்டுமே வெளியிட்டது படக்குழு.
ஜனவரி 9-ம் தேதி வெளியீடு என்பதால் விரைவில் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 16-ம் தேதி மாலை 6:30 மணி 'தர்பார்' ட்ரெய்லர் வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ட்ரெய்லருடன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
'தர்பார்' பணிகளை ரஜினி முடித்துவிட்டதால், தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.