

'தர்பார்' இசை வெளியீட்டு விழா பேச்சால் சர்ச்சை ஆனதைத் தொடர்ந்து கமலிடம் நேரில் விளக்கம் அளித்துள்ளார் லாரன்ஸ்
சமீபத்தில் சென்னையில் ரஜினி நடித்த 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு லாரன்ஸ் பேசும் போது, "ரஜினி படத்துக்காக போஸ்டர் ஒட்டும் போது சண்டை போட்டுள்ளேன். இங்குச் சொல்வதில் தவறில்லை. கமல் சாருடைய போஸ்டர் ஒட்டப்படும் போது அதில் சாணி அடிப்பேன். அப்போதைய மனநிலை அப்படியிருந்தது. இப்போது இருவரும் கைப்பிடித்து நடக்கும் போது தான், வேறு ஏதோ நடக்கப் போகிறது எனத் தோன்றுகிறது" என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.
இந்தப் பேச்சு கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை உண்டாக்கியது. இதற்கு உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்தார். ஆனால், தொடர்ச்சியாக கமல் ரசிகர்கள் மத்தியில் லாரன்ஸின் பேச்சு கோபத்தை உண்டாக்கியது. மேலும், ரஜினி பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசும் போது கூட, எந்த அர்த்தத்தில் கமல் தொடர்பாகப் பேசினேன் என்று மீண்டும் விளக்கமளித்தார் லாரன்ஸ்.
இந்நிலையில், இந்தப் பேச்சு தொடர்ச்சியாகச் சர்ச்சையாகி வந்த நிலையில் கமலை நேரில் சந்தித்து விளக்கமளித்துள்ளார் நடிகர் மற்றும் இயக்குநர் லாரன்ஸ். இந்தச் சந்திப்பு தொடர்பாக ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
வணக்கம். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் குறித்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
எனது பேச்சு வேண்டுமென்றே தவறாகத் திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கெனவே நான் விளக்கமளித்துள்ளேன். இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன்.
எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.