

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் ‘டும் டும் டும்’, ‘பூவே செம்பூவே’ ஆகிய 2 தொடர்களும் விரைவில் 100-வது அத்தியாயங்களை எட்டுகின்றன.
இதில், நெல்லை மாவட்ட பின்னணியில் முழுக்க குடும்ப கதையாக உருவாகி வரும் தொடர் ‘டும் டும் டும்’. இதில் மைக்கேல் - விஜயலட்சுமியின் குறும்பு கலந்த காதல் காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இரு குடும்பங்கள் இடையிலான சண்டை, ஒரு ஊரையே பாதிக்க, ஊர் மக்கள் நலனுக்காக அந்த வீட்டின் இளம் ஜோடிகளுக்கு சம்பந்தம் பேச வீட்டுப் பெரியவர்கள் முடிவு செய்கின்றனர். தனது கனவை நோக்கி பயணிக்கும் நாயகியும், வேறொரு பெண்ணை காதலிக்கும் நாயகனும் சேர்ந்து இந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்கின்றனர். ஒருகட்டத்தில் இருவருக்கும் காதல் மலர, இவர்களது திருமணம் நடக்குமா? என்ற விறுவிறுப்பான திரைக்கதையுடன் தொடர் நகர்கிறது.
‘பூவே செம்பூவே’ தொடரில் பத்ராவாக மவுனிகா, வில்லி உமா மகேஸ்வரியாக ஷமிதா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒரு கொலை வழக்கில் தன் அண்ணி உமா மகேஸ்வரியை கைது செய்கிறாள் போலீஸ் அதிகாரியான பத்ரா. இதனால் உமா கோபமடைந்து, அனைத்து வகையிலும் பத்ராவுக்கு குடைச்சல் கொடுக்கிறாள். வேலையை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்படும் பத்ரா, புகுந்த வீட்டில் இருந்தும் வெளியேற்றப்படுகிறாள். எல்லாவற்றிலும் இருந்து மீண்டு, உமாவை பத்ரா எப்படி எதிர்க்கிறாள் என்பதை மையப்படுத்தி கதை நகர்கிறது.