

2019-ல் உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் 'பிகில்' என்று ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'பிகில்'. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்த அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். நயன்தாரா, டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராஃப், வர்ஷா பொல்லாமா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர்.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 25-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அனைத்து வசூல் சாதனைகளையும் உடைத்தது 'பிகில்' படத்தின் வசூல்.
தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. ஆனால், 'பிகில்' படத்தின் வசூல் நிலவரம் தொடர்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், இன்றுடன் 'பிகில்' படம் வெளியாகி 50 நாட்களாகியுள்ளது. இதற்கு அந்தப் படத்தில் நடித்தவர்கள் பலரும் தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். இன்றைய தினத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பதிவில், "'பிகில்' 50 நாட்கள் ஓட்டத்தை முடித்து, உலகளவில் இந்த வருடம் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறிய இந்த நேரத்தில், படத்தை விரும்பி, திரையரங்கில் பார்த்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக ’பிகில்’ படத்தின் வசூல் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக ஏஜிஎஸ் நிறுவனம் ட்வீட் செய்திருப்பதால், விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.