

குடும்பத்தைக் கவனிக்காமல் அலுவலகமே கதியென்று கிடக்கும் ஆண்களை எச்சரிக்கும் படம்தான் ‘காளிதாஸ்’.
சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுகிறார் பரத். அவர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், அடுத்தடுத்து பெண்கள் மாடியில் இருந்து கீழே விழுந்து இறக்கின்றனர். இதெல்லாம் தற்கொலைதான் என நினைக்கிறார் பரத்.
ஆனால், இப்படி அடுத்தடுத்து நடப்பதால், இதைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் உதவி ஆணையர் சுரேஷ் மேனனை நியமிக்கிறார் துணை ஆணையர் வேல்ராஜ். ஆனாலும், அவர் விசாரணையைத் தொடங்கிய பின்னரும் இரண்டு பெண்கள் இறக்கின்றனர்.
இதனால் வேலைப்பளு கூடுதலாக, பரத் வீட்டுக்கு வரும் நேரம் குறைகிறது. எந்த நேரமும் வழக்கு விசாரணையிலேயே அலைந்துகொண்டிருக்க, பரத்துக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை உண்டாகிறது. பெண்கள் இறந்ததற்கான காரணம் என்ன? குற்றவாளி யார்? கணவன் - மனைவி பிரச்சினை தீர்ந்ததா? என்பது மீதிக்கதை.
மனைவியின் சின்னச் சின்ன ஆசைகளைக்கூட நிறைவேற்ற முடியாத அதிருப்தி, மேலதிகாரிக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழல், அடுத்தடுத்து நிகழும் மரணங்களின் விசாரணை என தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் பரத். ஆனால், கதாநாயகனுக்கானதாக அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்படவில்லை. முக்கியக் கதாபாத்திரம் போல் படம் முழுக்க வருகிறார், அவ்வளவுதான்.
பரத்தின் மனைவியாக நடித்துள்ள ஆன் ஷீத்தல், உதவி ஆணையராக நடித்துள்ள சுரேஷ் மேனன் இருவரும்தான் படத்தின் பிரதான பாத்திரங்கள். 25 வருட போலீஸ் மூளை, சின்ன துரும்பு கிடைத்தால்கூட ஆணிவேரையே கண்டுபிடித்துவிடும் எனும் சுரேஷ் மேனனின் கதாபாத்திர வடிவமைப்பு, ரசிக்க வைக்கிறது.
பரத்தின் அன்புக்கு ஏங்கும் மனைவி கதாபாத்திரத்தில் ஆன் ஷீத்தல் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். பெண்களை எளிதில் தன் வலையில் வீழ்த்தும் ப்ளேபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆதவ் கண்ணதாசனுக்கு, தொடர்ந்து இதுபோன்ற வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கும்.
சுரேஷ் பாலா ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகரின் இசையும் படத்துக்குத் துணை நிற்கின்றன. சில இடங்களில் மட்டும் தேவையில்லாமல் பின்னணி இசையை உச்சஸ்தாயியில் கத்த விட்டுள்ளார் விஷால் சந்திரசேகர். பாடல்களும் மனதில் படியும்படி இல்லை.
சேஸிங் காட்சிகளில் அவர்கள் நடந்து/வாகனத்தில் செல்லும் ஒவ்வொரு தெருவையும் காண்பித்துக்கொண்டே இருப்பது, வேண்டுமென்றே படத்தின் நீளத்தை அதிகப்படுத்துவதற்காக வைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. அத்துடன், ஆதவ் கண்ணதாசன் - ஆன் ஷீத்தல் காட்சிகளுக்கும் கொஞ்சமாகக் கத்தரி போட்டிருக்கலாம்.
தனக்குக் கொஞ்சம்கூட நேரமே ஒதுக்குவதில்லை என மனைவி கோபமாக இருப்பது தெரிந்தும், தொடர்ந்து அவரை பரத் கண்டு கொள்ளாமல் போனது ஏன்? ஒரு இன்ஸ்பெக்டர், தன் வீட்டு மாடியில் குடிவந்தவரைச் சந்திக்க முயற்சி எடுக்காதது ஏன்? பப்பு கதாபாத்திரம் யாருடையது? என விடை தெரியாத கேள்விகள் படத்தைப் பற்றி உள்ளன.
சதா சர்வ காலமும் வேலை வேலை என்றே ஓடிக் கொண்டிருக்கும் கணவன்மார்களுக்கு, மனைவிகளின் நிலமையை ஆணியடித்தாற்போல் அப்பட்டமாகச் சொல்கிறது இந்தப் படம். தனிமை என்பது எவ்வளவு கொடூரம் நிறைந்தது, அது எந்தெந்த எல்லைக்கு இட்டுச் செல்லும் என்பதை, அதற்கான கூறுகளோடு தெளிவாக விளக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில்.
‘வேலை கொடுத்தவன்கிட்ட பம்முற. வாழ்க்கையையே கொடுத்தவள கண்டுக்க மாட்ற’ என படத்தில் ஒரு வசனம் இடம்பெறும். அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம். படத்துக்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கைக்கான அடிநாதமும் கூட.