'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்

'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளன.

'அசுரன்' பட வெளியீட்டுக்கு முன்பாக கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பை லண்டனில் தொடங்கினார் தனுஷ். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரேகட்டமாக லண்டனில் படமாக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. இதனைத் தொடர்ந்து 'பட்டாஸ்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார் தனுஷ். தற்போது மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் இந்தியக் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று (டிசம்பர் 11) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு டிசம்பர் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அத்துடன் பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. பிறகு, ஜனவரியில் 3 நாட்கள் மட்டும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்துவிடும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கர்ணன்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார் தனுஷ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in