

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாணா' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வைபவ் நடிப்பில் 'சிக்சர்' படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து 'காட்டேரி', 'லாக்கப்', 'டாணா' ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. தற்போது 'ஆலம்பனா' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் வைபவ்.
இதில் யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டாணா' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருந்தது படக்குழு. தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி வெளியீடு என அறிவித்துள்ளது படக்குழு.
இந்தப் படத்தில் பாண்டியராஜன், யோகி பாபு, நந்திதா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
'டாணா' கதைக்களம் குறித்து வைபவ் கூறுகையில், "இம்முறை நந்திதா, யோகி பாபு, இயக்குநர் யுவராஜ் என முற்றிலும் புதிய கூட்டணி. ஆனால் எல்லோருமே நண்பர்கள்தான். படத்தில் சென்டிமென்ட், காதல், காமெடி என எல்லாவிதமான அம்சமும் இருந்ததால் கதை கேட்டதும் ஒப்புக்கொண்டேன்.
கிராமத்தில் ஒரு பெரிய குடும்பம். ஹீரோவுக்கு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவனுக்கோ அவ்வப்போது பெண் குரலில் பேசுவது மாதிரியான ஒரு பிரச்சினை இருக்கும். இந்நிலையில் அவனது விருப்பம் என்ன ஆகிறது. அதைக் காதல், காமெடி கலந்து இயக்குநர் தொட்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார் வைபவ்.