

ஜெய் நடிக்கவுள்ள படத்துக்கு 'எண்ணித் துணிக' என்று தலைப்பிட்டது ஏன் என்று இயக்குநர் வெற்றிச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி, சித்தார்த் விபின், திவ்யதர்ஷினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கேப்மாரி'. நாளை (டிசம்பர் 13) வெளியாகவுள்ள இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது 'பிரேக்கிங் நியூஸ்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெய்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ஜெய். சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'எண்ணித் துணிக' எனத் தலைப்பிட்டுள்ளனர். இயக்குநர் வசந்திடமும், ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் வெற்றிச்செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் கதைக்களம் குறித்து வெற்றிச்செல்வன் பேசியதாவது:
" 'எண்ணித் துணிக' என்ற தலைப்பு திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். எண்ணித் துணிக கருமம் என்று தொடங்கும் அற்புதமான குறள் இது. ஒரு செயலில் ஈடுபடத் தொடங்கும் முன் அது குறித்து எத்தனை முறை வேண்டுமானால் சிந்திக்கலாம். ஆனால் முடிவெடுத்து விட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அதிலிருந்து பின் வாங்கக்கூடாது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்தக் குறள்.
இதை மையப்படுத்தித்தான் இப்படத்தின் கதாநாயகன் கதிர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜெய் இந்த வேடத்தில் நடிக்கிறார். தகவல் தொழில் நுட்பக் கம்பெனி ஒன்றில் பணியாற்றும் ஜெய், அந்தக் கணத்துக்காக வாழ்கிறவர். அதற்காக அவர் ஜாலி மனோபாவம் கொண்டவர் என்று சொல்வதற்கில்லை. தன் குடும்பம் மற்றும் நண்பர்கள் குறித்து அக்கறை செலுத்தும் நல்லியல்பு கொண்ட நர்மதா என்ற வேடம்தான் அதுல்யா ரவி ஏற்றிருக்கும் வேடம்,
சுண்ணாம்பு மற்றும் வெண்ணெய் போல் முரண்படும் இந்த இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஆனால் படத்தில் முக்கியத் திருப்பம் ஏற்படுவது இந்த முரண்பாட்டை வைத்து அல்ல. அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் ஜெய்யின் வாழ்க்கையில் சில ஆட்களால் குழப்பம் ஏற்படுகிறது. அதற்குப் பதிலடி தரும் விதத்திலான நடவடிக்கைகளில் ஜெய் ஈடுபடத் தொடங்குகிறார். பரபரப்பாக நகரும் த்ரில்லர் பாணியில் 'எண்ணித் துணிக' படம் இருக்கும்”.
இவ்வாறு இயக்குநர் வெற்றிச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் 'சீதக்காதி' படத்தில் அறிமுகமான வைபவ் அண்ணன் சுனில் ரெட்டி வில்லனாக நடிக்கவுள்ளார்.
இசையமைப்பாளராக சாம் சி.எஸ், ஒளிப்பதிவாளராக ஜே.பி.தினேஷ் குமார், எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.