ரஜினி சாரை இயக்குவேன் என நினைத்ததே இல்லை: இயக்குநர் பா.இரஞ்சித்  வெளிப்படை

ரஜினி சாரை இயக்குவேன் என நினைத்ததே இல்லை: இயக்குநர் பா.இரஞ்சித்  வெளிப்படை
Updated on
2 min read

ரஜினி சாரை இயக்குவேன் என்று நினைத்ததே இல்லை என 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பா.இரஞ்சித் பேசினார்.

பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. டிசம்பர் 6-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த அதியன் ஆதிரை இயக்கிய இந்தப் படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ஜான் விஜய், ரமேஷ் திலக், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படத்துக்கு நல்ல வரவேற்பு கொடுத்ததிற்காகப் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், லெனின் பாரதி, ரவிக்குமார், ஸ்ரீகணேஷ், கவிஞர் அறிவுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது:

"காலேஜ் படிக்கிற வரைக்கும் படம் எடுக்கணும் படம் தயாரிக்கணும் என்றெல்லாம் நினைத்து நான் வரவில்லை. நான் சந்தித்த ஆளுமைகள் தான் என்னைப் படமெடுக்க உந்தினார்கள். “சில்ட்ரன் ஆஃப் ஹெவன்” போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தின. என்னை அழ வைத்த படங்கள்தான் நான் பட்டுக்கொண்டிருந்த வலிகளைப் படமாகப் பதிவுசெய்யத் தூண்டின.

நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். அதன்பின் என்னைத் தெரிந்துகொண்டு என்னிடம் மற்றவர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன். புத்தகங்கள் வாசிக்கிறது பிரச்சினையாக இருந்த காலத்தில் தான் வந்தேன். தாஸ்தாவஸ்கி நாவலைப் படிக்கும் போது ஒரு இயக்குநர் என்னைக் கிண்டல் செய்தார். வேலை செய்யும்போது நான் பீப் பிரியாணி சாப்பிடுவதில் நிறையப் பேருக்குப் பிரச்சினை இருந்தது. அது பெரிய உளவியல் நெருக்கடி. அதை சினிமா தளத்தில் பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன்.

மாற்று சினிமாவிற்கு மக்களிடம் இருந்து பெரிய அங்கீகாரம் கிடைக்காமலிருந்தது. அதனால் அவற்றை மக்களுக்கான மொழியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ரஜினி சாரை இயக்குவேன் என்று நினைத்ததே இல்லை. அவர் கபாலி படத்தில் ‘அம்பேத்கர் கோட் போட்டதுக்கும், காந்தி கோட் போடாததுக்கும் பின்னாடி அரசியல் இருக்கு’ என்று பேசியது நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்ததாக உணர்ந்தேன்.

‘பரியேறும் பெருமாள்’ படம் எடுக்கும் போது பெரிய பயம் இருந்தது. குறிப்பாகப் பத்திரிகையாளர்கள் மீது பயம் இருந்தது. அப்படத்தை யாரிடமும் காட்ட வேண்டாம் என்று நினைத்தேன். பத்திரிகையாளர்களுக்குக் காட்ட வேண்டும் என்று முடிவானதும் இன்னும் பயமாக இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாரி செல்வராஜைக் கட்டிப் பிடித்தார்கள். எனக்கு கை கால்கள் உதறின. அந்தப் படம் தந்த உற்சாகம் பெரிது. அந்தப் படம் கமர்ஷியலாகவும் பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படம் தான் ’குண்டு’ படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைத் தந்தது.

அதியன் உழைப்பு எனக்குத் தெரியும். இந்த டீம் திறமை மிக்க மனிதர்கள். தகுதி, திறமை என்பதை இங்கு கவனிக்கும் விதத்தில் தான் பிரச்சினை இருக்கிறது. இந்தப் படத்தையும் பத்திரிகையாளர்களுக்குப் போட்டுக் காட்டுவதில் பயம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தையும் பத்திரிகையாளர்கள் கொண்டாடி விட்டார்கள். ரொம்ப அருமையான வெற்றியை பிரஸும் மக்களும் தந்தார்கள்.

வெறும் எதிர்ப்பை மட்டும் காட்டாமல் நல்ல விஷயத்தைக் கொண்டு சேர்ப்பதிலும் பத்திரிகை முன்னணியில் இருக்கிறது. சினிமா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆயுதம். எளிய மக்களிடம் ஒரு விஷயத்தை எளிதில் கடத்த முடியும் என்றால், அது சினிமாவில் தான் சாத்தியம். அப்படியான நல்ல படங்களைத் தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் தந்து கொண்டிருக்கும்”.

இவ்வாறு பா.இரஞ்சித் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in