

'சண்டக்காரி' படப்பிடிப்புக்கு இடையே லண்டன் காவல்துறையிடம் சிக்கினார் ஸ்ரேயா. பின்னர் விமல் காவல் துறையினரிடம் பேசி அவரை மீட்டுள்ளார்.
ஜெயகுமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'சண்டக்காரி'. ஆர்.மாதேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விமல், ஸ்ரேயா, பிரபு, சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, உமா பத்மநாபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் 'மகதீரா' படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் நடித்து வருகிறார்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவாளராகவும், அம்ரீஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் ஸ்ரேயா ஒரு மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரியாகவும், விமல் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவராகவும் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதில் ஒரு காட்சியை லண்டனில் உள்ள ஸ்டேன்போர்ட் விமான நிலையத்தில் விமல், ஸ்ரேயா, சத்யன் ஆகியோரை வைத்துப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியைத் தாண்டி ஸ்ரேயா சென்றுள்ளார். உடனே அங்கிருந்த லண்டன் காவல் துறையினர் ஸ்ரேயாவைச் சூழ்ந்து கொண்டனர். எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியைத் தாண்டி வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
உடனே, நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த விமல், தன்னிடமிருந்த ஆவணங்களைக் காட்டி படப்பிடிப்புக்காக வந்துள்ளோம் என்று காவல் துறையினரிடம் எடுத்துரைத்துள்ளார். விமலின் ஆவணங்களைச் சரிபார்த்து, ஸ்ரேயாவை விட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றது.
'சண்டக்காரி' படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.