

‘சங்கமித்ரா’வுக்குப் பிறகு படம் இயக்குவதையே விட்டுவிட முடிவெடுத்தேன் என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
‘பாகுபலி’ படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியால், ‘சங்கமித்ரா’ எனும் வரலாற்றுப் படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் சுந்தர்.சி. 2017-ம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. தேனாண்டாள் பிலிம்ஸ் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிப்பதாக இருந்தது.
ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்தப் படத்துக்காக குதிரையேற்றம், வாள் சண்டை போன்றவற்றை தனி பயிற்சியாளர் வைத்து கற்றுக் கொண்டார் ஸ்ருதி ஹாசன்.
ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படம் தொடங்குவது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. எனவே, ஸ்ருதி ஹாசன் படத்தில் இருந்து விலக, அவருக்குப் பதிலாக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனாலும், அறிவிப்பு வெளியாகி ஒரு வருடமாகியும் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை.
இதனால், ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரேசாவை வைத்து திடீரென ‘கலகலப்பு 2’ படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் இந்தப் படம் வெளியானது. தொடர்ந்து சிம்புவை வைத்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, விஷாலை வைத்து ‘ஆக்ஷன்’ ஆகிய படங்களை இயக்கினார்.
அத்துடன், வி.இஸட்.துரை இயக்கத்தில் ‘இருட்டு’ படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். இந்தப் படம் கடந்த 6-ம் தேதி ரிலீஸானது.
இந்நிலையில், ‘சங்கமித்ரா’ படம் குறித்து அவரிடம் கேட்டபோது, “உங்களைப் போலவே நானும் ‘சங்கமித்ரா’ படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். என்னுடைய கனவுப் படம் அது. எந்த வேலையும் பார்க்காமல், கிட்டத்தட்ட இரண்டு வருட உழைப்பை அதில் போட்டுள்ளேன்.
ஆனால், என்றைக்கு அந்தப் படம் வந்தாலும், தமிழ் சினிமாவின் பெயரை உசத்திச் சொல்லும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ‘சங்கமித்ரா’ படத்துக்குப் பிறகு இயக்கத்தையே விட்டுவிடலாம் என்ற நினைப்பில் இருந்தேன். காரணம், என்னுடைய முழு சினிமா வாழ்க்கையையும் அதை நோக்கித்தான் நகர்த்திக்கொண்டு சென்றேன்.
‘சங்கமித்ரா’வால் பணரீதியாகவும் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. ‘சங்கமித்ரா’ எடுப்பதற்குள் நான் பத்துப் பதினைந்து படங்கள் பண்ணிவிடுவேன். இருந்தாலும், அந்தப் படத்தைப் பண்ண வேண்டுமென அதன் மீது மிகப்பெரிய காதல் இருக்கிறது. நான் இத்தனை வருடங்கள் கற்றுக்கொண்டது எல்லாமே அதற்காகத்தான். அதை நோக்கித்தான் இயக்குநராக என் பயணமே இருந்தது.
மறுபடியும் அந்தப் படம் தொடங்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை” எனத் தெரிவித்தார் சுந்தர்.சி.