

‘எனக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பார்ப்பதற்கு எனது தந்தை உயிருடன் இல்லை என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது’ என்று காமெடி நடிகர் டி.எஸ்.கே. பேசினார்.
‘பெட்ரோமாக்ஸ்’ படத்தில் தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர் டி.எஸ்.கே. என்று அழைக்கப்படும் திருச்சி சரவணகுமார். ஹரிஷ் கல்யாணுடன் அவர் நடித்த ‘தனுசு ராசி நேயர்களே’ படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
தன்னுடைய சினிமா பயணம் குறித்து டி.எஸ்.கே. பகிர்ந்து கொண்டதாவது:
“நான் ஆதித்யா டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன். ஆனாலும், எனது நடிப்புப் பசிக்கு அதில் சரியான தீனி கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. எனவே, அங்கிருந்து வெளியேறி, என் நண்பன் அசாருடன் சேர்ந்து வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வந்தேன். அந்த சமயத்தில்தான் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு சீசன்-7’-ல் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இதற்கு முன் தொலைக்காட்சியில், சில படங்களில் நடித்தது என அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாகக் களம் இறங்கியதுபோல உத்வேகத்துடன் அதில் பங்கேற்று, டைட்டில் வின்னராக சிம்பு கையால் பரிசு பெற்றோம்.
அப்போதுதான் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தில் சினிமா ஆர்வமிக்க இளைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அசாரைத் தேடி வந்தது. ஆனால், அப்போது அவர் ‘ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல’ படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். எனவே, நான்கு காமெடி நடிகர்களில் ஒருவராக நடிக்க முடியாத சூழலில் அவர் இருந்தார்.
அதனால், அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் ரோஹின் வெங்கடேசனிடம் என்னை சிபாரிசு செய்தார். ஆனாலும், ஆடிஷனுக்குப் பிறகே அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க என்னைத் தேர்வு செய்தனர். என்னுடைய மிமிக்ரி திறமையும் ஒரு காரணமாக இருந்தது.
காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, முதலில் நாங்கள் நடிக்கும் காட்சிகளைப் படமாக்கினர். படப்பிடிப்புத் தளத்தில் ஒரு பெண் கூட இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான், தேவதையாக தமன்னா வந்தார். பெரிய நடிகை எனும் பந்தா இல்லாமல், எல்லோரிடமும் இயல்பாகப் பழகினார். சூர்யா, விக்ரம், ‘பாகுபலி’ காளகேயன் போல நான் மிமிக்ரி செய்து நடித்ததைப் பார்த்துப் பாராட்டினார்.
அத்துடன், எனது வேண்டுகோளை ஏற்று, அவரது தீவிர ரசிகரான அசாரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி கால் மணி நேரம் போனில் பேசினார். என் நண்பனுக்கு நான் கொடுத்த மிகச்சிறந்த பிறந்த நாள் பரிசு இதுவாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, ‘பெட்ரோமாக்ஸ்’ படத்துக்காக தமன்னா கொடுத்த ஒவ்வொரு பேட்டியிலும், தவறாமல் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டார். என் நடிப்பு அவருக்குப் பிடித்துவிட்டது என அப்போது உணர்ந்தேன்.
படம் ரிலீஸானபோது என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், ரசிகர்களிடம் எனக்குக் கிடைத்த வரவேற்பை தியேட்டருக்குச் சென்று ரசிக்க முடியவில்லை. ஆனாலும், நண்பர்கள் அனைவரும் எனது கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பு பற்றிக் கூறி, என்னை உற்சாகப்படுத்தினர்.
ஈகிள் ஐ நிறுவன தயாரிப்பாளர் சுதன் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டியதோடு, தனது அடுத்தடுத்த படங்களில் கட்டாயம் எனக்கு ஒரு கதாபாத்திரம் உண்டு என வாக்குறுதியும் தந்துள்ளார். மேலும், ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் என் நடிப்பைப் பாராட்டியதுடன், ‘இதுபோன்ற நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, நடிப்பில் உங்களுக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ என்றும் கூறினார்.
எனது அடுத்தடுத்த படங்கள், விரைவில் தயாரிப்பு நிறுவனங்களால் அறிவிக்கப்படும். ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இன்னொரு படத்திலும் நடிக்கிறேன்.
இவ்வளவு பாராட்டுகள் கிடைத்தும், நடிகனாக எனக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பார்ப்பதற்கு எனது தந்தை உயிருடன் இல்லை என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது” என வருத்தப்பட்டார்.