Published : 12 Dec 2019 12:14 PM
Last Updated : 12 Dec 2019 12:14 PM

ரஜினி எப்பவுமே அபூர்வம்... அதிசயம்! 

வி.ராம்ஜி


சினிமாவில் அப்படியொரு அபூர்வம் எப்போதாவது நிகழும். தியாகராஜ பாகவதர் தொடங்கி இன்று வரைக்கும் ஒவ்வொருவரையும் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் உட்காரவைத்து அழகுபார்த்து வருகிறது தமிழ்த் திரையுலகம். ஆனால் அறிமுகமானதில் இருந்து இன்று வரைக்கும்... இத்தனை வயதுக்குப் பிறகும் சூப்பர் ஸ்டார் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்றால் அது அபூர்வமும் ஆச்சரியமும் நிறைந்ததும்தான். அவர்... ரஜினிகாந்த்.


ஓர் சுபயோக சுபதினமாகத்தான் இருக்கவேண்டும். அல்லது சிவாஜிராவ் என்கிற பெயரை கே.பாலசந்தர் ரஜினிகாந்த் என்று மாற்றிய தருணம், அப்படியாக மாறியிருக்கவேண்டும். ‘பராசக்தி’யில் ‘சக்ஸஸ்’ என வசனம் பேசினார் சிவாஜி என்பார்கள். இந்த சிவாஜி ராவ் என்கிற ரஜினிகாந்த், ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் திரையில் தோன்றும் முதல் காட்சியிலேயே கதவு திறந்து வந்தார். உண்மையில் கதவைத் திறந்துவிட்டு, கைப்பிடித்து அழைத்து வந்தவர் கே.பாலசந்தர்.


ஹீரோ என்றால் சிவந்தநிறம் இருக்கவேண்டும். முடியை படிய வாரியிருக்கவேண்டும். சிகரெட்டோ மதுவோ ஆகாது நாயகர்களுக்கு! ஆனால் கருப்புநிறமும் கலைந்த தலைமுடியும் வாயில் சிகரெட்டை தூக்கிப் பிடிக்கிற ஸ்டைலும்தான் ரஜினியை எல்லோரும் பிடிக்கக் காரணமாயிற்று.
‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘காயத்ரி’ என ஆரம்பகால படங்கள் எல்லாமே வில்லத்தனமான படங்கள்தான். அவர் செய்த வில்லத்தனங்கள் மிரட்டியெடுத்தன. அதேபோல், ‘கவிக்குயில்’, ‘மாங்குடி மைனர்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ எல்லாமே சிவகுமார், விஜயகுமார் நாயகர்களாக வலம் வந்தார்கள். ரஜினி இரண்டாவதாக வந்தார். ஆனால் மெல்ல மெல்ல முன்னுக்கு வந்துகொண்டிருந்தார்.


‘பைரவி’ வந்தது. அதுவரை ஹீரோவாக இருந்த ஸ்ரீகாந்த் வில்லத்தனம் செய்தார். அதேபோல், ரஜினி வில்லத்தனத்தில் இருந்து விலகி ஹீரோயிஸத்துக்கு வந்தார். கே.பாலாஜியின் ‘பில்லா’ ரஜினியின் திரை வாழ்வில் இன்னொரு வாசல். இன்னொரு கதவு. இப்படியாகத்தான் ரஜினியின் வளர்ச்சி இருந்தது.


புகழும் பாரம்பரியமும் மிக்க ‘முரட்டுகாளை’ இவரை பட்டிதொட்டியெங்கும் அழைத்துப் போனது. வசூலில் கொடிகட்டிப் பறந்தார். கலெக்‌ஷன் ராஜாவானார். இதேகட்டத்தில்தான் தேவர் பிலிம்ஸும் ‘தாய் மீது சத்தியம்’, ‘அன்னை ஓர் ஆலயம்’ என படங்கள் இன்னும் அவரை உயரத்துக்குக் கொண்டு சென்றன. அப்படித்தான் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம், ‘ராணுவ வீரன்’, ‘மூன்று முகம்’, ‘தங்கமகன்’ என படங்களைத் தந்தது. பிறகுதான் வந்தார் ‘பாட்ஷா’.


ஒருபக்கம் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ என வந்தது. இன்னொரு பக்கம் விசுவின் கதை வசனத்தில் வந்த ‘தில்லுமுல்லு’, ‘நெற்றிக்கண்’ என கவிதாலயா படங்கள் வந்தன. அதேபோல் பஞ்சு அருணாசலத்தின் பி.ஏ.ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ’ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ என வந்தன. பின்னர், இன்னும் இன்னுமாக படங்கள் வந்தன. ரஜினி எனும் ஹீரோ மாஸ் ஹீரோவானார். ரஜினி எனும் ஸ்டார் சூப்பர் ஸ்டாரானார்.


’அண்ணாமலை’, ’தர்மதுரை’, ’பணக்காரன்’, ’மன்னன்’ என அடுத்தடுத்த கிராஃப் எகிறிக்கொண்டே, ஏறிக்கொண்டே போனது. ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’ என தொட்டதெல்லாம் துலங்கியது.


எந்த ஸ்டைலைக் கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தாரோ அதைக் குறைத்துக்கொண்டார். ஆனால் அந்த நடையின் வேகம் மட்டும் அப்படியே. பார்வையின் கூர்மை மாறவே இல்லை. வசனத்தின் ஸ்பீடு குறையவே இல்லை. ஷங்கரின் ‘சிவாஜி’யும் ‘எந்திரன்’ படமும் ரஜினியை மார்க்கெட் இறங்காமல் பார்த்துக்கொண்டன. ‘கபாலி’யும் ‘காலா’வும் இரண்டுவிதமான விமர்சனங்களைக் கொடுத்தாலும் ரஜினி ரஜினியாகவே இருந்தார். அவரின் மார்க்கெட் அவர் கைவசமே இருக்கிறது.


இதற்கு நடுவே ‘பாட்சா’ காலகட்டத்தில்தான் வந்தது அரசியல். அந்த அரசியல் வேறுவித அரசியல். அப்போதைய கணிப்பும் அவரின் முடிவும் ‘ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்’ என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அதேசமயம், படங்களில் அரசியலை லேசாகத் தொட்டார். ‘அரசியலுக்கு வாங்க’ என்று வசனங்கள் இருக்க ஒத்துக்கொண்டார். தமிழகத்தின் ஏதோவொரு ஏரியாவில் வார்டு தேர்தல் வந்தால் கூட, ரஜினியின் கருத்து என்ன என்பதாகத்தான் நகம் கடித்துக் காத்திருந்தார்கள் அவரின் ரசிகர்கள். இன்னமும் அப்படித்தான்! இதுவும் ரஜினியின் அபூர்வம்தான்; அதிசயம்தான்.


ஆக, சினிமாத்துறையிலும் அரசியல் அரங்கிலும் ரஜினியின் இந்த அதிரிபுதிரியும் அமைதியும் அபூர்வ அதிசயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
2021 தேர்தலுக்கு ரஜினி என்ன செய்யப்போகிறார் என்று பூவாதலையா போட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிற அதேவேளையில், ‘தர்பார்’ படத்தையும் சிவா இயக்கும் படத்தையும் பார்க்க, ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
ரஜினிக்கு இன்று (12.12.2019) பிறந்தநாள். 70-வது பிறந்தநாள். இத்தனை வயதுக்குப் பிறகும் அங்கே அமிதாப்பைப் போலவே ரஜினிதான் இங்கே சூப்பர் ஸ்டார்.


கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழக சினிமாவின் ஆளுமையாக இருக்கும் ரஜினியை வாழ்த்துவோம். பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x