

ரஜினியுடன் நடிப்பதற்காக மணிரத்னம் படத்தில் இருந்து விலகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதிய சரித்திர நாவலை, மிகப் பிரம்மாண்டமாக உருவாக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் இந்தப் படத்தை, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தோட்டா தரணி கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
முன்னரே தொடங்கியிருக்க வேண்டிய படப்பிடிப்பு, சில பிரச்சினைகள் காரணமாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இதனால், இதில் நடிப்பதாக இருந்த பார்த்திபன் உள்ளிட்ட சில நடிகர்கள், தேதிகள் இல்லாத காரணத்தால் படத்தில் இருந்து விலகிக் கொண்டனர்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து விலகியுள்ளார். இந்தப் படத்தில் அவர் குந்தவை நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போதுதான் தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்டக் காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய தேதிகளில் ரஜினியின் ‘தலைவர் 168’ படப்பிடிப்பு இருப்பதால், மணிரத்னம் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
சிவா இயக்கத்தில், ரஜினி நடிக்கும் ‘தலைவர் 168’ படத்தின் பூஜை நேற்று (டிசம்பர் 11) நடைபெற்றது. ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினியுடன் நடிக்க, கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி இருவரும் ரஜினியுடன் முதன்முறையாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராகப் பணியாற்றவுள்ளார். டி.இமான் இசையமைக்க, விவேகா பாடல்கள் எழுதுகிறார்.