அவர் யார்? - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப் பாருங்கள் - சித்தார்த்

அவர் யார்? - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப் பாருங்கள் - சித்தார்த்
Updated on
1 min read

அமைச்சர் ஜெயக்குமார்கூறிய கருத்துக்கு, நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதவில் பதிலடிக் கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு அதிமுகவினர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், "எடப்பாடி பழனிசாமி என் மாநிலத்துக்கும் நம் மக்களுக்கும் பிரதிநிதியாக இருக்கிறார் என்பது மிகவும் வெட்கமாக இருக்கிறது. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதவரளித்ததன் மூலம் அவருடைய சுயரூபமும், நேர்மையின்மையும், என்ன நடந்தாலும் பதவி முக்கியம் என்ற ஆசையும் வெளிப்பட்டுள்ளது” என்று கடுமையாகச் சாடினார். தமிழக முதல்வரை நேரடியாகவே சாடியதால், இணையத்தில் அவருடைய ட்வீட் வைரலானது.

நேற்று (டிசம்பர் 11) மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்வு முடிவடைந்தவுடன், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது சித்தார்த் ட்வீட் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அவர் யார்? எந்தப் படத்தில் நடித்துள்ளார்? விளம்பரத்துக்காக சில கேள்விகள் எழுப்புவார்கள். அவர்களை எல்லாம் பெரிய ஆளாக்க விரும்பவில்லை” என்று பதிலளித்துள்ளார்.

இந்த வீடியோவை வெளியிட்டு, 'உங்களைத் தான் சொல்கிறார் சித்தார்த்' என்று ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக சித்தார்த், "நான் யாரென்று அவர் கேட்கிறார். அவரது அரசாங்கம் எனக்கு 2014ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியது. 2017 ஆண்டு அவர்கள் எனக்கு விருது அறிவித்தனர் ஆனால் இன்னும் அதை வழங்கவில்லை.

விளம்பரத்துக்காகப் பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய இடத்தை நான் எனது சொந்த முயற்சியால் நேர்மையாகச் சம்பாதித்துள்ளேன். தேச நலனுக்காகப் பேசும் வரிக் கட்டும் குடிமகன்களை அவமானப்படுத்துவது உங்களுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்ஸர் அங்கிள். நீங்கள் ஒன்றும் என்னைப் பெரிய ஆள் ஆக்க தேவையில்லை. உங்கள் வேலையைப் பாருங்கள். அது போதும். விரைவில் குணமாகுங்கள்" என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.

சித்தார்த் இந்த ட்வீட்டுக்கு இணையவாசிகள் பலரும் சரியான பதிலடி எனக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in