

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது சன் டிவி.
விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சந்தர் இயக்கிய இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர். கடந்த மாதம் (நவம்பர்) வெளியான இந்தப் படம், தோல்வியைச் சந்தித்தது.
தொடர்ந்து ‘லாபம்’, ‘க.பெ. ரணசிங்கம்’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அத்துடன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தளபதி 64’ படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கவுள்ள ‘துக்ளக் தர்பார்’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையக் கைப்பற்றியுள்ளது சன் டிவி. தில்லி பிரசாத் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
விஜய் சேதுபதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார். விஜய் சேதுபதி - பார்த்திபன் இருவரும் ஏற்கெனவே ‘நானும் ரெளடிதான்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
‘துக்ளக் தர்பார்’ படத்தின் பூஜை, கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்றது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதற்கு முன்பே படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.