

‘டெடி’ படத்தின் கதைப் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளார் சக்தி செளந்தர்ராஜன்.
ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு (2020) கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (டிசம்பர் 10) ‘டெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், தலைப்புக்கான காரணம் மற்றும் கதைப் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளார் சக்தி செளந்தர்ராஜன்.
“டெடி பியர் பொம்மைக்கும் ஆர்யாவுக்கும் கதையில் ஒரு பெரிய இணைப்பிருக்கிறது. அதனால், நிறைய பெயர்கள் யோசித்தோம். பரிச்சயமான வார்த்தையான ‘டெடி’ என்ற பெயரையே வைக்கலாம் என முடிவு செய்தேன். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்தால் அதற்கான காரணம் விளங்கும்.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை டெடி பியரை எப்படி கொஞ்சி மகிழ்வார்களோ, அதேபோல் அடுத்த ஆண்டு இந்த ‘டெடி’ படத்தையும் பார்த்து மகிழ்வார்கள். அப்படியொரு விருந்து வைக்கத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
படத்தின் நாயகனோடு, கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட கதாபாத்திரம் ஒன்று கூடவே இருக்கும். முழுமையாக அதை கிராபிக்ஸில் மட்டுமே பண்ண முடியும். அப்படிப்பட்ட ஒரு டெடி பியர் கேரக்டர். ஆர்யாவுக்குப் பிறகு படத்தின் இரண்டாவது முக்கியக் கதாபாத்திரம் இதுதான் என்று சொல்லலாம்.
முழுக்க தொழில்நுட்பத்தை வைத்தே செயற்கையாக உருவாக்கி, நடிக்கவும் சண்டை போடவும் வைக்கிறோம். பார்வையாளர்களுக்கு இது புதுமையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார் சக்தி செளந்தர்ராஜன்.