

‘பெல்லி சூப்புலு’ தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானிசங்கர் நடிக்கின்றனர்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘பெல்லி சூப்புலு’. தருண் பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்தில், ரீத்து வர்மா ஹீரோயினாக நடித்தார். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இந்தி மற்று மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சிறந்த தெலுங்குப் படம் மற்றும் சிறந்த திரைக்கதை - வசனம் என இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது. மேலும், சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகை என 2 பிரிவுகளில் ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றது.
இந்நிலையில், இந்தப் படம் தமிழிலும் ரீமேக் செய்யப்படுகிறது. ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க, ஹீரோயினாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். ஏ.எல்.விஜய்யிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் சுந்தர், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று (டிசம்பர் 11) தொடங்கியது. நாசர் க்ளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.