என்னை ஏமாற்றி கை கழுவி விட்டனர்: அருண் விஜய், சகோதரிகள் மீது வனிதா விஜயகுமார் குற்றச்சாட்டு

என்னை ஏமாற்றி கை கழுவி விட்டனர்: அருண் விஜய், சகோதரிகள் மீது வனிதா விஜயகுமார் குற்றச்சாட்டு
Updated on
2 min read

அருண் விஜய்யும் சகோதரிகளும் என்னை ஏமாற்றி, கை கழுவி விட்டனர் என வனிதா விஜயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

வனிதா விஜயகுமாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சொத்தில் பங்கு கேட்டு வனிதா தகராறு செய்ய, காவல் துறை வரை இந்தப் பிரச்சினை சென்றது. மேலும், வனிதாவின் மூத்த மகன், அவருடன் இல்லாமல், விஜயகுமாருடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தன்னுடைய எல்லா துன்பங்களுக்கும் அருண் விஜய்யும் சகோதரிகளும்தான் காரணம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

“அருண் விஜய்... முதலில் உங்கள் சொந்த ரத்த பந்தத்தை ஏமாற்றி, காயப்படுத்தாதீர்கள். பிறகு உங்களைச் சுற்றி அன்பைப் பரப்பலாம். என்ன நடந்திருந்தாலும் என்னைத் தூக்கி வீசிவிட்டு மகிழ்ச்சியாக இருக்கும் உரிமையோ, காரணமோ உங்களுக்கில்லை. நானும், என் குழந்தைகளும் சரிசமமாக நடத்தப்பட தகுதியானவர்கள். நீங்கள் அனைவரும் அனுபவிக்கும் எல்லாவற்றுக்கும் என் அம்மாதான் காரணம்.

வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் எனக்குச் செய்ததையெல்லாம் ஒரு பெண்ணாக இருந்து வலிமையுடன் தாங்கி, தாண்டி வந்துள்ளேன். திரைப்படங்களில் மட்டும் உங்களை நாயகன் என்று கூறிக்கொள்வதில் அர்த்தமில்லை. நிஜ வாழ்க்கையிலும் அதற்கு ஏற்றார்போல வாழுங்கள். உங்களுக்கு உரிய வயதாகிவிட்டது என நினைக்கிறேன்.

தைரியமான ஆணாக துணிந்து நின்று, பிரச்சினைகளைத் தீருங்கள். உங்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு உந்துதலாக இருங்கள். தவறான உதாரணமாக அல்ல. நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும். யாரும் கச்சிதமானவர்கள் கிடையாது. எல்லோருமே தவறு செய்திருக்கிறோம். கடைசியில் முக்கியமானது என்னவென்றால், நாம் நம்முடைய குழந்தைகளை விரும்பும் சுதந்திரமான, வலிமையானவர்கள்.

கற்பனை செய்து பாருங்கள்... நான் உங்கள் மகனையும் வீட்டையும் உங்களிடமிருந்து பறித்து, உங்களையும், உங்கள் குடும்பத்தையும் போலீஸை விட்டு துன்புறுத்த வைத்து, உங்களுக்குச் சொந்தமானதையெல்லாம் பிடுங்கிக்கொண்டு உங்களைத் தெருவில் தூக்கிப்போட்டு, உங்களை மன ரீதியாகச் சித்ரவதை செய்து, நீங்கள் செய்யாத ஒரு தவறுக்கு உங்கள் அப்பாவையும், ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் உங்களுக்கு எதிராகத் திருப்பினால் என்ன ஆகும்?

இவற்றையும் தாண்டி இன்னும் நிறைய எனக்குச் செய்தீர்கள். என்னைத் தள்ளிவிட்டு, நசுக்கி, நெருக்கினாலும்... நான் தாக்குப் பிடித்திருக்கிறேன். தற்கொலை செய்துகொண்டு, என் குழந்தைகளைச் சாகடிக்காமல் இன்னும் வலிமையாக, வெற்றிகரமாக மாறியிருக்கிறேன். தற்கொலை செய்து கொள்ளாமல் உங்களை ஏமாற்றியதற்கு மன்னித்துவிடுங்கள். வளருங்கள், பொறுப்புடன் இருங்கள், சரியான விஷயத்தைச் செய்யுங்கள்.

என் சொந்தக் குடும்பத்தாலேயே வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டேன். சினிமாவில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் அதே பிரச்சினைகளைத்தான் நானும் எதிர்கொள்கிறேன். எளிதில் வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. தர்மசங்கடமாக, அவமானமாக இருக்கிறது. நான் மூன்று குழந்தைகளின் தாய். அதில், 2 பேர் பெண்கள்.

நான் இந்தத் துன்புறுத்தலை அனுபவிக்கக் காரணம் அருண் விஜய்யும், எனது மற்ற சகோதரிகளும்தான். அவர்கள், என் அம்மாவின் சொத்தில் சந்தோஷமாக வாழ்கிறார்கள். என்னை ஏமாற்றி, கை கழுவி விட்டனர். எனது குழந்தைகள் இப்படி இருக்க என்ன தவறு செய்தனர்? ஒவ்வொரு விஷயத்தையும் நான் தனியாளாகக் கடந்து வந்திருக்கிறேன். கடவுள் எப்போதும் என் பக்கம் இருந்திருக்கிறார்” என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in