

ரஜினி நடிக்கும் ‘தலைவர் 168’ படத்தின் பணிகள், பூஜையுடன் இன்று (டிசம்பர் 11) தொடங்கியுள்ளன.
ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வரும் இந்தப் படத்தை, முதலில் பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்கு முதல் வாரம், அதாவது ஜனவரி 9-ம் தேதியே வெளியிட்டால் இரண்டு வார வசூல் மொத்தமாகக் கிடைக்கும் என்பதால், முன்கூட்டியே வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினியின் அடுத்த பட பூஜை இன்று நடைபெற்றது. சிவா இயக்கவுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தலைவர் 168’ என்று அழைக்கப்படுகிறது.
ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினியுடன் நடிக்க, கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி இருவரும் ரஜினியுடன் முதன்முறையாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராகப் பணியாற்றவுள்ளார். டி.இமான் இசையமைக்க, விவேகா பாடல்கள் எழுதுகிறார்.
நாளை (டிசம்பர் 12) ரஜினியின் பிறந்த நாள். அதைக் கொண்டாட ரசிகர்கள் தயாராகியுள்ள நிலையில், ‘தலைவர் 168’ படத்தின் பூஜையும் சேர்ந்து அவர்களை இரட்டிப்பு மகிழ்ச்சில் ஆழ்த்தியுள்ளது.