

100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தும் இயக்குநர்கள் பழக்கமில்லாதவர்கள், திறமையில்லாதவர்கள் என்று இசை வெளியீட்டு விழா ஒன்றில் கே.ராஜன் பேசினார்.
சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'நான் அவளை சந்தித்த போது'. எல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் கே.பாக்யராஜ், பேரரசு, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும் போது, "இந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்று தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தைத் தராமல் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழ்ப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கும் படமாக இது இருக்கும் என்று வாழ்த்துகிறேன்.
நான் என் பையனை நாயகனாக நடிக்க வைத்து இரண்டு படம் எடுத்தேன். என் மகன் ஒருநாள் இனி என்னை நடிக்க வைக்காதீர்கள் என்றான். நான் சொல்லியும் கேட்கவில்லை. நடிகைகளைக் கட்டிப்பிடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. உனக்கும் என்றேன். அவன் சம்பாதிக்கவே இல்லை. அவனை நாயகனாக நடிக்க வைத்துத் தயாரித்த 'சின்ன பூவைக் கிள்ளாதே', 'அவள் பாவம்' ஆகிய இரண்டு படங்களால் எனக்கு 37 லட்சம் நஷ்டம். இரண்டு சின்னப் படங்கள் நஷ்டமாகிவிட்டதே என்று பெரிய படம் 'டபுள்ஸ்' தயாரித்தேன். அதில் 95 லட்சம் நஷ்டம். 'நினைக்காத நாளில்லை' என்று ஒரு படம் தயாரித்தேன். அதில் 1 கோடியே 10 லட்சம் நஷ்டம். சின்ன படங்களில் சின்ன நஷ்டம், பெரிய படங்களில் பெரிய நஷ்டம்.
பிறகு 15 வருடங்கள் கஷ்டப்பட்டு பிரபுதேவா, பார்த்திபன் ஆகியோரிடம் எல்லாம் உதவி இயக்குநராக வேலை செய்தார். என்னிடம் பேசாமல் வீட்டுக்கு வராமல் 10 ஆண்டுகள் கஷ்டப்பட்டார். பின்பு ’எல்.கே.ஜி’ படம் இயக்கினார். மூன்றரைக் கோடிக்குப் படம் எடுத்து ஏழரைக் கோடி வரை லாபம். அதுபோல் என் மகனின் நண்பரான இப்படத்தின் இயக்குநர் ரவிசந்தரும் பெரிதாக ஜெயிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
பொய்சொல்லி படம் எடுக்கக்கூடாது. சூட்டிங் எத்தனை நாள் என்று சொல்கிறோமா அத்தனை நாட்களுக்குள் படத்தை எடுக்க வேண்டும். 200 நாள் படம் எடுப்பவர்கள் எல்லாம் கிட்டக் கூடச் சேர்க்க மாட்டேன். ஏனென்றால் அவர்கள் எல்லாம் பழக்கமில்லாத இயக்குநர்கள். திறமையில்லாதவர்கள். திறமையான இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, வெங்கடேஷ் எல்லாம் வெற்றிகரமான இயக்குநர்கள். 70 நாட்கள் கடந்து படப்பிடிப்பு செய்யமாட்டார்கள். சிக்கனமாகப் படமெடுத்தால் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றலாம்.
பெரிய பட்ஜெட்டில் படமாக்குகிறார்கள் என்றால் நாயகன், நாயகியைக் காக்கா பிடிக்கிறார்கள் என்று அர்த்தம். நாயகனுக்கு 10 கோடி சம்பளம் கொடுத்தால், தயாரிப்பாளருக்கு 1 கோடி லாபம் வரவேண்டும். 10 கோடி, 20 கோடி நஷ்டமாக ஏன் படம் எடுக்க வேண்டும். இயக்குநர்கள் ஒத்துழைத்தால் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றலாம். நாயகன் - நாயகி இன்னும் ஒத்துழைத்தால் தயாரிப்பாளர் இன்னும் பிழைத்துவிடுவார். பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் கொட்டிவிடலாம், சினிமாவில் திரும்ப வராது. இந்தப் படத்துக்கு இவ்வளவு தேவை என்றால், அதை மட்டும் தான் செலவு பண்ண வேண்டும்.
ஆடியன்ஸ் இப்பொழுது மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். நல்ல படத்தைக் கொண்டாடுகிறார்கள். எத்தனையோ சின்னப்படங்கள் பெரிதாக ஜெயித்திருக்கிறது. சின்ன படங்கள் வெற்றி பெற்றால் நாட்டுக்கும், திரையுலகிற்கும் நல்லது. 100 கோடி, 200 கோடியில் எடுக்கப்படும் பெரிய படங்கள் வெற்றி பெற்றால் இந்த நாட்டுக்கு ஒரு பலனுமில்லை. 2 கோடி, 3 கோடியில் எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெற்றால், 100 தயாரிப்பாளர்கள் உள்ளே வருவார்கள். வேலை வாய்ப்பு பெருகும்.
ஒரு இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் பேசியது பிரச்சினையாகிவிட்டது. அவரெல்லாம் சிந்தித்துப் பேசுபவர். நான் கூடக் கொஞ்சம் கோபத்தில் பேசிவிடுவேன். பாக்யராஜ் சார் பெண்களுக்குக் கொடுக்கும் மரியாதையை வேறு யாரும் தரமுடியாது. பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை தானே சொன்னார். நீங்கள் சொன்னது நியாயம் நல்லது. அதற்காக எந்த வழக்காக இருந்தாலும், உங்களுடன் நாங்கள் இருப்போம்" என்று பேசினார் கே.ராஜன்.