

எனக்குக் கல்யாணம் நடக்காததுதான் பிரச்சினையா? என்று 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் யோகி பாபு கேள்வி எழுப்பினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் ஷங்கர், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் யோகி பாபு பேசும்போது, " 'பாட்ஷா' படம் பார்க்க 4 ரூபாய் டிக்கெட்டில் அடித்துப் பிடித்துப் போய் பார்த்தேன். இன்று அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி. 'தர்பார்' படப்பிடிப்பில் ரஜினி சார் நிறைய சொல்லிக் கொடுத்தார். அவருடைய படங்களுக்குக் காமெடி நடிகர் தேவையில்லை. அவரே சூப்பராக காமெடி பண்ணுவார்" என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கிய ஆர்.ஜே.விக்னேஷ் மற்றும் ரம்யா இருவருமே "உங்களுக்கு எப்போது திருமணம்" என்று கேள்வி கேட்டார்கள். அதற்கு யோகி பாபு, "நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. எனக்குக் கல்யாணம் நடக்காததுதான் பிரச்சினையா? கூடிய விரைவில் எனக்குத் திருமணம் நடக்கும். உனக்குத் தை மாதம் திருமணம் நடக்கும். நான் வருகிறேன் என ரஜினி சார் சொல்லியிருக்கார்" என்று பதில் அளித்தார் யோகி பாபு.