

இனி இன்னும் எச்சரிக்கையாக இருப்பேன் என்று நகைக்கடை விளம்பர சர்ச்சைக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்துப் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும், சில படங்களையும் இயக்கியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி மிகவும் பிரபலம். சில வருடங்களுக்கு முன்பு இவர் தனியார் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார்.
தற்போது அந்த நகைக்கடையில் தங்க நகை சேமிப்புத் திட்டத்துக்கு ஏராளமானோர் பணம் கட்டி ஏமாந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நகைக்கடை விளம்பரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்திருந்ததால் பலரும் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக லட்சுமி ராமகிருஷ்ணன், "நான் அந்த விளம்பரத்தை ஒரு மாடலாக, நடிகையாக, நான் பிரபலமாவதற்கு முன் செய்தேன். நான் மாடலிங்கிற்கும், திரைப்படங்களுக்கும் அப்போது புதிது. அந்த விளம்பரம் பல வருடங்கள் பயன்படுத்தப்பட்டது. நான் இப்போது எச்சரிக்கையாக இருக்கிறேன். பல பொருட்களின் விளம்பரங்களில் நான் இன்று நடிப்பதே இல்லை. இனி இன்னும் ஜாக்கிரதையாக இருப்பேன்" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.