

'வலிமை' படப்பிடிப்பு எப்போது என்றும் வெளியீட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்தும் போனிகபூர் தெரிவித்துள்ளார்.
'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அஜித். இந்தப் படத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். ’வலிமை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பூஜை மட்டுமே முடிவுற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் தேர்வு என மும்முரமாக பணிகள் தொடங்கப்பட்டன. அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிவடைந்துவிட்டாலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
'வலிமை' படப்பிடிப்பு இந்தத் தேதியில் தொடக்கம் என்று பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தாலும், படக்குழு எதையுமே உறுதிப்படுத்தவில்லை. தற்போது முதன்முறையாக 'வலிமை' படம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார் போனி கபூர். சென்னையில் நேற்று (டிசம்பர் 8) தனியார் இணையதளத்தின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு போனி கபூர் பேசும் போது, "’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும். அஜித் இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 'வலிமை' படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. 'நேர்கொண்ட பார்வை' பட வெளியீட்டின் போது அளித்தப் பேட்டிகளில், அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியின் அடுத்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனத் தெரிவித்து வந்தார் போனி கபூர். ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிவிட்டதால், தற்போது 'வலிமை' வெளியீட்டைத் தீபாவளிக்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.