கமல் குறித்த பேச்சால் சர்ச்சை: ராகவா லாரன்ஸ் விளக்கம்

கமல் குறித்த பேச்சால் சர்ச்சை: ராகவா லாரன்ஸ் விளக்கம்
Updated on
1 min read

'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் கமல் குறித்த பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நேற்று (டிசம்பர் 7) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் ஷங்கர், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸின் பேச்சு, ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதில் அவர் பேசும் போது, "ரஜினி படத்துக்காக போஸ்டர் ஒட்டும் போது சண்டை போட்டுள்ளேன். இங்குச் சொல்வதில் தவறில்லை. கமல் சாருடைய போஸ்டர் ஒட்டப்படும் போது அதில் சாணி அடிப்பேன். அப்போதைய மனநிலை அப்படியிருந்தது. இப்போது இருவரும் கைப்பிடித்து நடக்கும் போது தான், வேறு ஏதோ நடக்கப் போகிறது எனத் தோன்றுகிறது" என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இது கமல் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியது. இந்த வார்த்தைகளை மட்டும் தனியாக எடுத்து, லாரன்ஸை கடுமையாகத் திட்டத் தொடங்கினார். உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கக் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.

அதில், "நண்பர்களே, ரசிகர்களே... ’தர்பார்’ இசை வெளியீட்டு விழாவில் நான் பேசிய பின்னர் சிலர் வேண்டுமென்றே நாம் கமல் சார் படப் போஸ்டர்கள் மீது சிறு வயதில் சாணியடித்ததாகச் சொல்லியதை மட்டும் முன்னிறுத்தி சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.

என் பால்ய பருவத்தில் நான் தலைவரின் மிகத்தீவிர ரசிகராக இருந்தேன். அதனால், சரியான புரிதல் இல்லாத வயதில் தெரியாமல் அவ்வாறு செய்தேன் என்பதையே சுட்டிக் காட்டிப் பேசினேன். நான் வளர்ந்த பின்னர் கமல் சாரும் ரஜினி சாரும் கைகோத்து நடப்பதைப் பார்த்து மகிழ்கிறேன். கமல் சார் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது.

நான் எப்போது ஏதாவது தவறாகப் பேசியிருந்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுவிடுவேன். ஆனால் இந்த முறை நான் எதுவும் தவறாகப் பேசவில்லை. நீங்கள் தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா முழு வீடியோவையும் பார்த்தால்தான் உங்களுக்கு நான் பேசியது புரியும். சிலர் திட்டமிட்டே திரித்து வெளியிடுகின்றனர். கமல் சார் மீது எனக்குள்ள மரியாதையை என் இதயம் அறியும். அதை வேறு யாரிடமும் விளக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

ஆனாலும், கமல் ரசிகர்கள் தொடர்ச்சியாக லாரன்ஸைத் திட்டிப் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in