உண்மையில் ரஜினி தான் அதிசயம், அற்புதம்: லாரன்ஸ் புகழாரம்

உண்மையில் ரஜினி தான் அதிசயம், அற்புதம்: லாரன்ஸ் புகழாரம்
Updated on
2 min read

ரஜினி சார் ஒரு அதிசயம், அற்புதம் என்று 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் லாரன்ஸ் புகழாரம் சூட்டினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நேற்று (டிசம்பர் 7) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் ஷங்கர், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸின் பேச்சு, ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் லாரன்ஸ் பேசியதாவது:

’தனிவழி’ பாடல் சும்மா கிழி. அற்புதமாக இருந்தது. அந்தப் பாடலில் வரும் சீண்டாதே என்ற வார்த்தை ரொம்ப பிடித்திருந்தது. ரஜினி சாருடைய மாஸ் ப்ளஸ் உங்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கிறது. உங்களுடையப் பாடல் கேட்கும் போது, திரையரங்கில் போய் ஆட வேண்டும் என்று தோன்றுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் சார் எந்தவொரு படம் பண்ணினாலும் அதிலொரு மெசேஜ் இருக்கும். இதிலும் மிகப்பெரிய மெசேஜ் சொல்லியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதுவும் இந்தக் காலகட்டத்தில் ரஜினி சாரோடு படம் பண்ணியிருப்பதில் மகிழ்ச்சி. ரஜினி சாரோடு லைகா நிறுவனம் இணைந்து உலகளவில் பெருமைப்படும் அளவுக்கான படம் எடுத்தார்கள். இப்போது கமர்ஷியல் படத்துக்காக கைக் கோர்த்துள்ளீர்கள். இந்தப் படத்தைப் பார்க்கும் போது 'பாட்ஷா'வை மிஞ்சக்கூடிய படமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

'தர்பார்' படத்தில் பணிபுரிந்த அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். இந்த விழாவில் கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்க வேண்டியன் நான். என்னை முதல் வரிசையில் உட்கார வைத்த ரஜினி சாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினி படத்துக்காக போஸ்டர் ஒட்டும் போது சண்டை போட்டுள்ளேன். இங்குச் சொல்வதில் தவறில்லை.

கமல் சாருடைய போஸ்டர் ஒட்டப்படும் போது அதில் சாணி அடிப்பேன். அப்போதைய மனநிலை அப்படியிருந்தது. இப்போது இருவரும் கைப்பிடித்து நடக்கும் போது தான், வேறு ஏதோ நடக்கப் போகிறது என தோன்றுகிறது. ஒன்றுமே இல்லாத மனிதனை, ரசிகனை பெரிய ஆளாக்கி முதல் வரிசையில் உட்கார வைத்து அழகுப் பார்க்கும் மனது ரஜினி சாருக்கு மட்டுமே உள்ளது.

ரஜினி சார் அதிசயம், அற்புதம் என்று சொன்னவுடன் தமிழ்நாடே நிலை குலைந்துவிட்டது. இதற்குக் காரணம் என்னவென்றால் அதிசயம், அற்புதம் என்கிற வார்த்தை நிறையப் பேர் சொல்லியிருக்கிறார்கள். அதை ரஜினி சார் சொன்ன போது தான் அந்த அதிசயம், அற்புதம் வார்த்தைக்கே அதிசயம் நடந்தது. இப்போது அதைப் பற்றியே பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அதிசயம், அற்புதம் அவர் தான். ஏனென்றால் அவர் நமக்கு கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷம், அதிர்ஷ்டம்.

கடவுள் சில சமயங்களில் மனிதர்களுக்கு அட்வைஸ் பண்ணுவதற்காகச் சிலரைப் படைப்பார். அனைத்து மதங்களிலுமே அமைதியாக இருக்கணும், தப்பு பண்ணக்கூடாது, சொல்லாலும் செயலாலும் யாரும் துன்புறக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் அமைதி தேவை என்னும் போது குருஜியிடம் சொல்வோம். அவர் நம்மிடம் எல்லாம் சொல்லிவிட்டு, யாருக்கும் துரோகம் பண்ணாதீர்கள், அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது, உன் வேலையை ஒழுங்காகச் செய் என்று சொல்வார்கள்.

ரஜினி சாருடைய வாழ்க்கை பலபேருடைய வாழ்க்கையை மாற்றும். நமக்கெல்லாம் ஒரு குரு அவர். அதுவும் சினிமாவில் நமக்குக் கிடைத்த ஒரு குரு அவர். ரஜினி சார் இதுவரை யாரையாவது திட்டிப் பார்த்தீர்களா?. தன்னை திட்டுபவர்களைக் கூட விடு கண்ணா.. கடவுள் பார்த்துக்குவார் என்று தான் சொல்வார். ரஜினி சார் யாருக்காவது துரோகம் செய்து பார்த்திருக்கிறீர்களா. ரஜினி சாரால் அழிந்த குடும்பம் என்று ஏதாவது ஒன்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

அதே போல், அவரை அடிக்கடித் தொந்தரவு பண்ணுவேன். அண்ணா இப்படிப் பேசுகிறார்கள் என்று அவரிடம் சொல்வேன். உடனே, விடு கண்ணா... அவர் பார்த்துக்குவார் என்று சொல்வார். அவரிடம் இருக்கும் தன்னடக்கம், அமைதி வேறு யாருக்கும் கிடையாது. 'பாபா' படம் எடுத்து நஷ்டமான போது, அதற்கான பணத்தைத் திரும்பக் கொடுக்க ரஜினி சாரால் மட்டுமே முடியும்.

இவ்வாறு லாரன்ஸ் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in