

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தாமல் விடப்பட்ட ஒரு வெடிகுண்டு, மாமல்ல புரம் கடற்கரையில் கரை ஒதுங்கு கிறது. அதை கைப்பற்றும் உள்ளூர் போலீஸார், காவல் நிலையத்தில் போட்டுவைக்க, பிறகு களவாடப் படும் அந்த குண்டு காயலான் கடைக்கு வருகிறது. அங்கே லாரி ஓட்டுநராக பணிபுரியும் செல்வத் தின் (தினேஷ்) லாரியில் பயணிக் கிறது. அதை தனதாக்கிக்கொள்ள முயல்கிறார் ஆயுத தரகர் ரத்தன் (ஜான் விஜய்). போலீஸாருக்கோ எப்படியாவது அதை மீட்க வேண் டுமே என்ற தலைவலி. இன்னொரு பக்கம் பத்திரிகையாளர் தன்யா (ரித்விகா) அந்த குண்டை கண்டு பிடிக்க விரைகிறார். அனைவரும் துரத்தும் அந்த குண்டு என்ன ஆனது, அதன் பின்னணியிலான அரசியல் என்ன ஆகிய கேள்வி களுக்கு விடை தருகிறது படம்.
இரண்டாம் உலகப் போர் பின்ன ணியில் உலகமெங்கும் நூற்றுக் கணக்கான படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் தமிழ்ப் பட உலகின் முதல் முயற்சி இது. போரால் பாதிக்கப்படாத இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டில், போரின் பாதிப்பைச் சொல்லி ஆயுதப் பயன்பாட்டைக் கைவிடச் சொல்லும் கதைக் களம் தமிழுக்கு புதிது. பழைய இரும்புக் கடை வியாபாரம், அதில் தொழிலாளர் - முதலாளி உறவு போன்ற அம்சங்கள் புதிதாக இருப்பதால் அதைக் கவனிக்க வாய்ப்பு தருகிறது திரைக்கதை.
கரை ஒதுங்கிய குண்டு வெடித் தால் ஏற்படும் பாதிப்பு குறித்து படத்தின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுவதால், அது வெடிக் குமோ, வெடிக்காதோ என்ற பரபரப் பும் தொற்றிக்கொள்கிறது. ஆனால் அதை தாண்டி, திரைக்கதையில் நம்மை பாதிக்கும், ஈர்க்கும் எந்த திருப்பமும் இல்லாதது மைனஸ்.
சாதி கடந்த காதல் ஒன்று திரைக்கதையில் மற்றொரு சரடாக வருகிறது. வழக்கம்போல ஆண வக்கொலை முயற்சி, காதலர்கள் தப்பித்தல் என பார்வையாளர் களுக்குப் பழகிய பாதையில் படம் பயணிக்கிறது.
வெடிக்காத குண்டை கைப்பற்ற முயலும் ஆயுதக் கும்பலின் பின்னணி காட்சிகளும் நம்பும்படி இல்லை. எல்லாமே போகிற போக்கில் காட்டப்படுகிறது. பத்திரி கையாளர் ரித்விகா வரும் காட்சிகளி லும் புதுமை இல்லை. தினேஷின் அப்பா எப்படி இறந்தார் என்பது பற்றி மாறுபட்ட இரு தகவல்கள் படத்தில் வருகின்றன. இயக்குநர் அதை எப்படி மறந்தார் என தெரிய வில்லை. காயலான் கடையில் எளிய மக்களின் உழைப்பு சுரண்டப்படு வதையும், அங்கு அவர்கள் எதிர் கொள்ளும் அடக்குமுறை, படும் துயரத்தை காட்சியாக்கிய விதம் அருமை.
தினேஷுக்கு முக்கியமான கதா பாத்திரம். ஒடுக்கப்பட்ட தொழிலா ளர்களின் நிலைமையைச் சித்தரிக் கும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். ஒருபுறம் வெடி குண்டு, மறுபுறம் காதலி. இரண்டுக் கும் இடையில் மாட்டிக்கொண்டு இருதலைக் கொள்ளி எறும்புபோல படம் முழுவதும் துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருக்கிறார்.
முனிஸ்காந்துக்கும் இது குறிப்பிடத்தக்க படம். பஞ்சர் என அழைக்கப்படும் அவர், தன் அசல் பெயரான சுப்பையா சாமி என்பதை சொல்லும்போது அவரது முதலா ளிக்கே அது தெரியவில்லை. ஆள் முரடாகத் தெரிந்தாலும் அசடா கவே இருக்கும் மனிதர்களின் பிரதிநிதியாக, தான் ஏற்ற கதா பாத்திரத்தை நடிப்பால் மெரு கேற்றி இருக்கிறார். லாரியில் இருப் பது வெடிகுண்டு என தெரிந்த பிறகு அவரது பதற்றமும், பயமும் கலகலப்புக்கு உதவுகின்றன.
சித்ராவாக வரும் நாயகி ஆனந்தி இதேபோன்ற கதாபாத்திரங்களில் ஏற்கெனவே சிலமுறை தோன்றி விட்டதால் புதுமையாகத் தோன்ற வில்லை. ஆனால், நன்கு பழகிய பெண்ணைப் பார்ப்பது போன்ற உணர்வை தன் இயல்பான நடிப்பால் தந்து அந்த குறையைப் போக்கிவிடுகிறார்.
ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார் ஒரு பயணக் கதைக்கு அவசியமான ஒளிப்பதிவை வழங்கியுள்ளார். திரைக்கதைக்கு போதுமான அளவில் போதுமானவற்றைப் படம் பிடித்து உதவியிருக்கிறது ஒளிப்பதிவு. தென்மாவின் இசை யில் பாடல்களும், பின்னணி இசையும் இதமாக உள்ளன.
படத்தின் மிகப்பெரிய பலம் வசனம். ‘‘எல்லாவற்றையும் பேசித் தீத்துக்கணும் ஆயுதத்த தூக்கக் கூடாது, 500 வருஷம் புல்லு பூண்டு கூட முளைக்காதுடா அந்த குண்டு வெடிச்சா..!” என்பது போன்ற வச னங்கள் படத்தின் மைய நோக் கத்தை பளிச்சென்று சொல்லி விடுகின்றன.
புதிய களத்தை தேர்ந்தெடுத் ததில் இயக்குநர் அதியன் ஆதிரை கவனம் ஈர்க்கிறார். வெடிகுண்டுக்கு பூசாரி, கடவுள்போல ஜோடனை செய்து அழகுபார்ப்பது அழகு. ஆனால், நிமிர்ந்து உட்கார வைக்கும்படியான தருணங்களை உருவாக்கியிருக்க வேண்டிய படத் தில் அதை இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார். வெடிக்குமா, வெடிக்காதா என்ற எதிர்பார்ப்பி லேயே நிமிடங்களை நகர்த்திய ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ கடைசிவரை வெடிக்கவே இல்லை என்பது ஏமாற்றமா, ஆறுதலா என்ற கேள்வி எழுகிறது. அதை தாண்டி, சாமானிய மக்களுக் கான அரசியலைப் பேசிய வகை யில் கவனிக்கவேண்டிய குண்டு!