

சேரன் நடிப்பில் உருவாகியுள்ள 'ராஜாவுக்கு செக்' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான சேரன் படங்களை இயக்கிக் கொண்டே நடிக்கவும் தொடங்கினார். இந்த ஆண்டு அவரது இயக்கத்தில் 'திருமணம்' படம் வெளியானது. அதேவேளையில் 'ராஜாவுக்கு செக்' என்னும் படத்தில் நாயகனாகவும் நடித்து வந்தார்.
சாய் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இர்ஃபான், சிருஷ்டி டாங்கே, சரயு உள்ளிட்ட பலர் சேரனுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.
பிக் பாஸ் வீட்டிற்குள் சேரன் சென்றதால், அவர் வெளியே வந்தவுடன் விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தி வெளியிடப் படக்குழு முடிவு செய்தது. ஆனால், சரியான வெளியீட்டுத் தேதி எதுவுமே அமையாததால் காத்திருந்தது.
தற்போது 2020-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி 'ராஜாவுக்கு செக்' வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அடுத்து இயக்கவுள்ள படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபடவுள்ளார் இயக்குநர் சேரன்.